84.சிந்துரச் செம்பொடிப்போல் திருமாலிருஞ் சோலையெங்கும்
நாச்சியார் திருமொழி ஒன்பதாம் பத்து இனிதே ஆரம்பம் :) இந்தப் பத்துப் பாடல்களும் ஆண்டாள் , அழகருக்குச் சமர்ப்பணம் செய்தவை .திருமால் இரும் சோலை எனப் பெயர்பெற்ற அழகர்மலை அல்லவா ? அதனால் அங்கிருக்கும் பூக்களிடம் பிதற்றுகிறாள் இந்தப் பூவை .
அழகர்கோயில் |
மதுரைக்குப் பெருமை சேர்க்கும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் சித்திரைப் பெருவிழா இந்த மலைவாழ் பெருமாள் தான் .பாண்டிய வைணவத் தலங்களில் முதன்மையானது . அழகான கோட்டை வாசல் வரவேற்கும் . ஆங்காங்கே பழமையின் எச்சங்கள் இன்றும் . மலை மீதுள்ள ஊற்று எங்கிருந்து தோன்றுகிறது என்றே சொல்ல முடியாது.. வற்றாத ஊற்று அது . இன்று நூபுர கங்கை எனப் பெயர் மாற்றம் பெற்ற , அதன் உண்மைப் பெயர் என்னவென அறிய இந்தப் பத்துப் பாடல்களைத் தொடர்ந்து படியுங்கள். . பதினெட்டாம்படி கருப்பு தான் முதலில் வரவேற்பார் .
பாடல் : 84
சிந்துரச் செம்பொடிப்போல் திருமாலிருஞ் சோலையெங்கும்
இந்திர கோபங்களே எழுந்தும்பரந் திட்டனவால்
மந்தரம் நாட்டியன்று மதுரக்கொழுஞ் சாறுகொண்ட
சுந்தரத் தோளுடையான் சுழலையினின் றுய்துங்கொலோ
விளக்கம் :
சிந்துரச் செம்பொடிப் போல் திருமால் இரும் சோலை எங்கும் - பற்பல வண்ணங்கள் கொண்ட செம்மையான நுண் பொடி போல திருமால் இருக்கும் சோலை எங்கும்
இந்திர கோபங்களே எழுந்தும் பரந்திட்டனவால் - பல வண்ணங்கள் கொண்ட வண்ணத்துப் பூச்சிகளானவை மேலெழும்பியும் பரந்தும் சோலைக்கு வண்ணங்கள் இட்டன
மந்தரம் நாட்டியன்று மதுரக் கொழுஞ்சாறு கொண்ட - மந்தர மலையைக் கடைந்து அமிழ்தம் பெற்ற பிறகு தோன்றிய , அமிழ்தம் போன்ற திருமகளை உண்டவன்
சுந்தரத் தோள் உடையான் சுழலை யினில் இன்று உய்துங் கொலோ - அழகிய தோளை உடையவன் காதல் என்னும் சுழலில் சிக்கிக்கொண்ட நான் இதிலிருந்து எப்படி மீள்வேன் ?
சிந்தூரம் என்பது செந்தூரம் என ஆகிவிட்டது தற்பொழுது. சிவப்பை மட்டுமே குறிப்பதாகவும்..
பற்பல வண்ணங்கள் கொண்ட செம்மையாக அரைத்த நுண்பொடி போல , வண்ணத்துப் பூச்சிகள் மலை மீது மேலே எழுந்தும் பரவியும் தன் வண்ணங்களை மலைக்கு இட்டன
அழகிய தோளுடையோன் அவனது காதல் வலையில் சுழன்று கொண்டிருக்கிறேன்.. அதில் இருந்து மீள்வேனோ ?
விடுதலையை விரும்பாமல் அதிலேயே சுழல்வதும் பின்னர் அவன் சுழலிலே தான் சிக்கிக்கொண்டதாக குற்றம் சாட்டுவதும் அப்பப்பா..பொல்லாதவர்களப்பா இந்தப் பெண்கள் !
No comments:
Post a Comment
மறுமொழி இடுக!