Wednesday 5 October 2016

81.கார்காலத் தெழுகின்ற கார்முகில்காள் வேங்கடத்துப்

81.கார்காலத் தெழுகின்ற கார்முகில்காள் வேங்கடத்துப்
பாடல் : 81
கார்காலத் தெழுகின்ற கார்முகில்காள் வேங்கடத்துப்
போர்காலத் தெழுந்தருளிப் பொருதவனார் பேர்சொல்லி
நீர்காலத் தெருக்கிலம் பழவிலைபோல் வீழ்வேனை
வார்காலத் தொருநாள்தம் வாசகம்தந் தருளாரே!

விளக்கம் :

கார்காலத்தே எழுகின்ற கார்முகில்காள்  வேங்கடத்துப் - மழைக் காலத்தே எழுகின்ற வேங்கட  மழை மேகங்களே
 போர்காலத்தில் எழுந்தருளிப் பொருதவனார் பேர்சொல்லி  -  போர் காலத்தில் எழுந்தருளிப் போர் புரிந்தவரின் பேர்  சொல்லி
நீர் காலத்து எருக்க  இலம் பழ விலை போல் வீழ்வேனை - நீர் சூழ்ந்த காலத்து பழுத்த எருக்க இலை போல் ஒடிந்து  வீழ்வேனே
வார்காலத்து ஒருநாள்தம் வாசகம் தந்து அருளாரே - வருங்காலத்தில் நான் வாழ ஒரு நாளாவது என் உயிரைப் புதுப்பிக்கும் வாசகம் தந்து அருளச் சொல்லுங்கள்

மழைக்காலத்திலே திருமலையில் எழுகின்ற மழை மேகங்களே !
இராவணனுடன் போர் புரிய நேரிட்ட போர்க்காலத்தில் எழுந்தருளி இராமபிரானாரின்  பேர் சொல்லி


மழைக்காலத்தில் பழுத்து விழுகின்ற எருக்க இலை போல ஒடிந்து கீழ் விழுகின்ற எனக்கு, எதிர் வருங்காலத்தில் ஒருநாளாவது என் உயிர் வாழ வேங்கடவன்  . எனைச்  சேர  தான் வருவதாக  உங்களிடம் சொன்னார்  என்றொரு நல் வாசகம் தந்து அருளச் சொல்லுங்களேன் !


ஒவ்வொரு முறையும் அவன் பேர் சொல்லி என்ற சொல்லாடலைச் சொல்கிறாள் ஆண்டாள்.. ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி, கோவிந்தன் குணம் பாடி, பொருதவனார் பேர் சொல்லி  .. அவன் பெயரைச் சொல்வதிலேயே அவ்வளவு உவகை கொள்கிறாள் .கண் இமைக்கும் அளவு நேரம் கூட அவனது திருநாமத்தைச் சொல்ல அவள் மறக்கவில்லை எந்நேரம் சிந்தையில் அவனே
"வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க 
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய் "
என்று திருப்பாவையில் ஐந்தாம் பாடலில் சொல்கின்றாள்..
அவனை  மனத்தினால் சிந்தித்து  திருநாமங்களைச் சொன்னோமேயானால்
நாம் முன்வினைச் செய்த பாவங்கள் கூடத் தீயினில் தூசாகும் என்கிறாள்..
அதை நாச்சியார் திருமொழி   ஒவ்வொரு இடத்திலும் அவ்வப்பொழுது நமக்கு நினைவூட்டுகிறாள்..
போர்க்காலத்தில் எழுந்தருளி போர்புரிந்த (பொருதவனார் -பொருதுதல் -போர் புரிதல் )  இராமபிரானாரின்  பேரைச் சொல்லிகிட்டே இருக்கேன்..மழைக்காலத்தில் பழுத்து கீழே விழும் எருக்க இலை போல ஒடிந்து விழுகின்றேனே அதற்காகவாவது இரக்கப்பட்டு என்னிடம் சொல்லச் சொல்லி ஏதேனும் வாசகம் தந்தருளினாரா ? வருங்காலத்தில் நான் வாழ , துரும்பையும் தூணாகப் பற்றி நான் வாழ்ந்திருக்க அந்த ஒரு வாசகம் போதுமே ஒருநாளாவது சொல்லச் சொல்லுங்களேன் !


1 comment:

மறுமொழி இடுக!