Thursday, 23 June 2016

51.அன்றுல கம்மளந் தானையுகந்தடி

51.அன்றுல கம்மளந் தானையுகந்தடி
பாடல் :51
அன்றுல கம்மளந் தானையுகந்தடி
மைக்கண வன்வலி செய்ய
தென்றலுந் திங்களு மூடறுத் தென்னை
நலியும் முறைமை யறியேன்
என்றுமிக் காவி லிருந்திருந் தென்னைத்
தகர்த்தாதே நீயும் குயிலே
இன்றுநா ராயண னைவரக் கூவாயேல்
இங்குத்தை நின்றும் துரப்பன்

விளக்கம் : 
அன்று உலகம் அளந்தானை உகந்து - அன்று உலகம் அளந்தவனை மனத்திற்கு உகந்தவனாகக் கொண்டு விரும்பினேன்
அடிமைக்கண் அவன்  செய்ய -  அவனுக்கு அடிமையாய் இருக்கும் பொருட்டு அவனை  விரும்பினால் அவனோ என்னை வந்து சேராமல் எனக்கு வேதனையையேத் தந்தான்
தென்றலும் திங்களும் ஊடு அறுத்து -  தென்றலும், நிலவும் என் உயிரின் ஊடே பிளந்து
என்னை  நலியும் முறைமை அறியேன் - என்னை வதைப்பது என்ன  முறையோ நான் அறியேன்
என்றும் இக்காவில் இருந்து என்னைத் - எப்பொழுதும் இந்தச் சோலையிலே இருந்து
தகர்த்தாதே நீயும் குயிலே என்னை - நீயும் உயிரை வதைக்காதே குயிலே
இன்று நாராயணனை வரக் கூவாயேல் - இன்றே நாராயணனை என்னோடு வந்து இணைய வர நீ கூவாவிடில்
இங்குத்தை நின்றும் துரப்பன் - இங்க இருந்து உன்னை துரத்திடுவேன்  பார்த்துக்க .

அன்று உலகம் அளந்தவனை விரும்பியது மனத்திற்கு உகந்ததாக இருந்தது..அவனுக்கு அடிமையாய் இருக்கும் பொருட்டு விரும்பினால் அவனோ என்னை வந்து சேராமல் எனக்கு வேதனையைத் தந்தான். அவனைப் பிரிந்திருக்கும் இத்தருணத்தில் , அவன் இல்லாத் தனிமையின் வேதனையை இன்னும் கூட்டும் விதமாக தென்றலும் நிலவும் என் உயிரின் ஊடே பிளந்து என்னை வதைப்பது எந்த வகை நியாயம் என்று எனக்குத் தெரியலையே..


ஏற்கனவே இப்படி ஒரு வேதனையில் நான் வாடிக் கொண்டு இருக்கிறேன் இதுல நீ வேற இந்தச் சோலையில்  இங்கேயே இருந்து  கொண்டு கூவி உன் பேடையோடு கூடி மகிழ்ந்து அதைப் போல் என்னாலும் இருக்க முடியவில்லையே என்று நான் வேதனைப்படும்படி என்னைத் துன்புறுத்தாதே ..இன்றே அந்த நாராயணனை   என்னைச் சேர நீ கூவாவிடில் நான் இந்தச் சோலையில் இருந்து உன்னைத் துரத்திடுவேன் பார்த்துக்க



கோபம் வரப் பல காரணங்கள் உண்டு..அதிலே ஒன்று மோகமும் ,  பிரிவாற்றாமையும் .அதை இறக்கி வைக்கத் தகுந்த தோள் அருகே இல்லாத பொழுதில் பித்து பிடிக்கும்..கோதைக்கும் இங்கே அந்நிலை தான்.. பெண்ணுக்கு தொட்டதுக்கெல்லாம் கோபம் வருகிறது என்றால் ஆங்கே கோபம் தொடாததுக்குத்தான் என்றறிக :) அதனால்தான் குயிலிடம் விதம் விதமாக தன் வேதனையைச் சொன்னவள் இறுதியில் நாராயணன் வந்து தொடாத கடுப்பைக் குயிலிடமே காட்டுகிறாள். இன்றே அவரை வரச் சொல்லு இல்லாட்டி இந்தச் சோலையில் இருந்தே உன்னைத் துரத்திடுவேன் என்று வெகுண்டு மிரட்டுகிறாள்..

பூங்காற்று மெதுவாகத் தொட்டாலும் போதும் 
பொன்மேனி நெருப்பாகக் கொதிக்கின்றது 
நீரூற்றிப் பாயாத நிலம் போல  நாளும் 
என் மேனி தரிசாக இருக்கின்றது 
தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை 
இனிமை இல்லா வாழ்வில் எதற்கு இந்த இளமை 

ஏனோ இந்தத் திரைப் பாடல் வரிகள் யாவுமே கோதைக்கு வெகுவாகப் பொருந்திப் போகின்றது..வாலி பெண்ணின் மனத்தைத் தொட்டு எழுதிய நின் பேர் , பார் இருக்கும்வரை வாழி .
சமீபத்தில் டிவிட்டரில் "நச்" என்று ஒரு கவிதை படித்தேன்.

புணர ஆள் இல்லாதவர்களே 
மழை நேரத்தில்  கவிதை எழுதிக்கொண்டு இருக்கிறார்கள் 

நெற்றிப்பொட்டில் அடித்தாற் போன்ற வரிகள்.. மார்கழிக் காலையும் மழை நேரத்து மாலையும் துணையற்றவர்களுக்கு பெரும் சாபம்.இருப்பவர்களுக்கு வரம் :)
போதும் ஓடிடுவோம்..கோதை ஏற்கனவே கண்ணன் இல்லாத கோபத்தில் குயிலைக் கடிந்து கொண்டிருக்கிறாள்..இதிலே நாம் வேறு வெறுப்பேற்ற வேண்டாம்







No comments:

Post a Comment

மறுமொழி இடுக!