Monday 6 June 2016

46.மென்னடை யன்னம் பரந்துவிளையாடும்

46.மென்னடை யன்னம் பரந்துவிளையாடும் 
பாடல் :46
மென்னடை யன்னம் பரந்துவிளையாடும்
வில்லிபுத் தூருறை வான்றன்
பொன்னடி காண்பதோ ராசையி னாலென்
பொருகயற் கண்ணிணை துஞ்சா
இன்னடி சிலோடு பாலமு தூட்டி
எடுத்தவென் கோலக் கிளியை
உன்னொடு தோழமை கொள்வன் குயிலே!
உலகளந் தான்வரக் கூவாய்!

விளக்கம் :
மென் நடை அன்னம் பரந்து விளையாடும் - மெல்ல நடக்கும் அன்னம் எல்லா இடங்களிலும் பரந்து விளையாடும்
வில்லி புத்தூர் உறை வான் தன் - வில்லி புத்தூரில் உறைந்துள்ளவன் தன்
பொன்னடி காண்பதோர் ஆசையினால் - பொற்பாதங்கள் காணும் ஓர் ஆசையினால்
என் பொரு கயல் கண்ணினை துஞ்சா - என் மீன் போன்ற கண்கள் தூங்கவில்லை
இன்னடிசிலோடு பால் அமுதூட்டி - இனிமையான அடிசிலோடு (அக்கார அடிசில் ) பால் அமுதும் ஊட்டி
எடுத்த என் கோலக் கிளியை - வளர்த்த என் கோலக் கிளியை
உன்னொடு தோழமை கொள்வன் குயிலே ! - உன்னோடு நட்பாக ஆக்குகிறேன் குயிலே
உலகளந்தான் வரக் கூவாய் ! - உலகளந்தான் வரக் கூவுவாயாக !

மெல்ல மென்மையாக நடக்கும் அன்னம் எல்லா இடங்களிலும் பரந்து (பரவலாக ) விளையாடும் ,  வில்லிபுத்தூரில் உறைந்து இருப்பவன்தன் பொன் திருவடி காண்பதோர் ஆசையினால் , என் மீனை ஒத்த கண்கள் சண்டையிட்டுக் கொண்டு தூங்கவில்லை..இனிமையான அடிசிலோடு (அக்கார அடிசில் எனும் பதார்த்தம்..நெய்யால் செய்யப்படுவது ) பால் அமுதும் ஊட்டி எடுத்து நான் வளர்த்த என் கோலக் கிளியை உன்னோடு தோழமை ஆக்குகிறேன் குயிலே ! உலகளந்தான் வரக் கூவுவாயாக !


ஓவியம் -கேசவ் 
குயிலிடம் கொஞ்சுகிறாள்..என் கிளியை எல்லாம் உனக்கு தோழி ஆக்குகிறேனே அந்த உலகளந்தான் என் உடலையும்  அளக்க வரக் கூவுவாயாக !
எனக்கு இதைச் செய்தா நான் உனக்கு இதைத் தாரேன் என ஆசை காட்டுவது உலக இயல்பு..கோதையும் அதைத்தான் குயிலிடம் சொல்கிறாள் :) 

No comments:

Post a Comment

மறுமொழி இடுக!