Saturday, 11 June 2016

48.பொங்கிய பாற்கடல் பள்ளிகொள் வானை

48.பொங்கிய பாற்கடல் பள்ளிகொள் வானைப் 
பாடல் :48
பொங்கிய பாற்கடல் பள்ளிகொள் வானைப்
புணர்வதோ ராசயி னால்என்
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்
தாவியை யாகுலஞ் செய்யும்
அங்குயி லே!.உனக் கென்ன மறைந்துறைவு
ஆழியும் சங்குமொண் தண்டும்
தங்கிய கையவ னைவரக் கூவில்நீ
சாலத் தருமம் பெறுதி

விளக்கம் :
பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானைப் - பொங்கி எழுந்த பாற்கடலில் அரவணையில் பள்ளி கொண்டு இருப்பவனைப்
புணர்வதோர் ஆசையினால் - கூடல் செய்கின்ற ஆசையினால்
என் கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்து  - என் முலைகள்
கிளர்ந்து சூடாகி குதூகலம் கொண்டு
ஆவியை  ஆகுலஞ் செய்யும் - என் உயிரைத் துன்புறுத்தும்
அங்குயிலே ! உனக்கென்ன மறைந்து உறைவு - அழகிய குயிலே ! உனக்கென்ன மறைவு வாழ்க்கை வேண்டிக் கிடக்கு
ஆழியும் சங்கு மொண் தண்டும் - சக்கரமும் சங்கும் கதையும்
தங்கிய கையவனை வரக் கூவில் - கையில் கொண்டவனை வரக் கூவுவாய் எனில்
நீ சாலத் தருமம் பெறுதி - உனக்கு ரொம்பப் புண்ணியம் கிடைக்கும்

பொங்கிய பாற்கடலில் பாம்பின் மீது படுத்துறங்கும் திருமாலைப் புணர்கின்ற ஆசையினால் , என் முலைகள் கிளர்ந்து வெப்பமேறி குதூகலம் கொண்டு என் உயிரைத் துன்பம் செய்யும். .




அழகிய குயிலே ! உனக்கென்ன இந்த மறைவு வாழ்க்கை..சங்கும் சக்கரமும் கதையும் தன் கைகளிலே தாங்கியவனை நீ வரக் கூவுவாய் எனில் உனக்கு ரொம்பப் புண்ணியமா போகும்..

என்ன அழகான பேச்சு வழக்கு..எவரிடமாவது நாம் விரும்பிய காரியம் நடந்தே ஆக வேண்டுமெனில் அதுவும் அது அவர்களால் நடக்கக் கூடும் எனில் யப்பா சாமி இதை நீயே செஞ்சுடேன் உனக்குப் புண்ணியமாப் போகும்ன்னு சொல்லுவோம்..அதை இங்கே அழகாகச் சொல்கிறாள் கோதை.. :)
பெண்களின் வேட்கை,  அப்பொழுது அவர்தம் உடலில் ஏற்படும் மாற்றங்களையும் அழகாக வெளிப்படுத்துகின்றாள்..

இதனால் தானோ என்னவோ இந்த நாச்சியார் திருமொழி பிரபலம் ஆக விடாமல் மறைத்து விட்டார்களோ என்றெண்ணுகிறேன்..இன்றளவும் தன் விருப்பத்தை வெளிப்படுத்தும் வெளிப்படையாகப் பேசும் பெண்களை குடும்பப் பெண்களாக பார்க்கத் தவறுகிறார்கள். அது அநாகரிகம் ,பண்பாடு இல்லை  என காலங்காலமாக மரபணுவிலேயே பதியப்பட்டு வருகின்றது . இதனாலேயே வெளிப்படையாகப் பேசும் பெண்களை பெண்களுக்கே பிடிப்பதில்லை. அதே நேரம் வெளிப்படையாகப் பேசுதல் என்பதைத் தவறாகப் புரிந்து கொண்டு புரட்சி செய்கிறேன் பேர்வழிகளையும் எமக்கு அறவே பிடிப்பதில்லை. உள்ளார்ந்த நிமிர்வுக்கும் , அசட்டுத்தனமான கவன ஈர்ப்புக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள்.

ஆனால்ஆண்டாளைப் பிடித்திருக்கிறது. அவள் தன் உணர்வுகளை அழகாகச் சொல்லும்விதம் பிடித்திருக்கின்றது :) இதனாலேயே என் மனத்திற்கு மிக அருகில் வந்து அமர்ந்துகொண்டு விட்டாள்.

பக்தி என்பதைத் தாண்டி கண்ணன் மீதான காதலும் காமமும் வெகு அழகு :)
அவள் பாடல்களைத்  தொடர்ந்து ரசிப்போம் !

No comments:

Post a Comment

மறுமொழி இடுக!