53.வாரண மாயிரம் சூழவலம்செய்து
நாச்சியார் திருமொழி ஆறாம்பத்து இனிதே ஆரம்பம் :) மன்மதனிடம் வேண்டி , எங்கள் சிற்றில் சிதையாதே என்று இறைவனிடமே வேண்டி, உடைகளைத் திருடியவனிடம் கூறைச் சேலை கேட்டு ,தாம் கண்ணனைச் சேருவோமா என்று கூடல் குறி கேட்டு, குயில் விடு தூது வரை வந்தாச்சு..வந்து சேர்ந்தானோ சேரலையோ ஆசைப்பட்டவனோட சேர நிஜத்தில் வேணா தடை இருக்கலாம்..ஆனா கற்பனைக்கும் கனவுக்கும் தடை போட முடியாதில்லையா ? அதான் கண்ணனோட கல்யாணம் ஆனா எப்படி இருக்கும் என்று கனவு காண்கிறாள்..பெண் பார்ப்பதில் ஆரம்பித்து , கெட்டி மேளம்கொட்டி ,(தாலி மட்டும் கிடையாது.. ஏனெனில் பண்டைய இந்துத்திருமணத்தில் அது வழக்கில் இல்லை . இது ஓர் வரலாற்றுச் சான்று.இங்கு சொல்லப்படுபவை யாவும் இந்துத் திருமண சடங்கு..தமிழர் வழக்கில் பனையோலைத் தாலி உண்டு..பின்னாளில் இந்து மதம் தமிழர் வழக்கை தனதாக்கிக் கொண்டது. ஞே ..நாமெல்லாம் இந்து தானே என்பவர்களுக்கு.. தமிழர்களுக்கு மதம் இல்லை வாழ்வியல் முறை மட்டுமே. அந்த அந்த கால கட்டத்தில் வந்த மதங்களை ஏற்றுக் கொண்டார்கள்..பின்னாளில் இந்து மதம் உள்வாங்கிக் கொண்டது. ஆண்டாள் பெரியாழ்வார் வீட்டில் வளர்ந்தவள். ஆகவே அங்கு பின்பற்றப்படும் சடங்குகளை அறிந்தவள். ) அம்மி மிதித்து அருந்ததி பார்த்து இந்து மத சடங்குகளை அடிப்படையாக வைத்து கனா காண்கிறாள்.. திருமணம் ஆகாதவர்கள் இந்தப் பதினோரு பாடல்களைப் பாராயணம் செய்தால் திருமண யோகம் கிட்டும் என்பது நம்பிக்கை..நம்பிக்கை இருக்கோ இல்லையோ அவள் கனாக் காணும் அழகைக் கண்டு ரசிக்கவாவது இதைப் படியுங்களேன் :)
தோழியிடம் தன் கனாக்களைப் பகிர்தல் |
53.வாரண மாயிரம் சூழவ லம்செய்து
நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்
விளக்கம் :
வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து - ஆயிரம் யானைகள் புடை சூழ தெருக்களைச் சுற்றி வந்து
நாரணன் நம்பி நடக்கின்றான் என்று எதிர் - அந்த நாராயணன் நம்பி நடக்கின்றான் அவரை எதிர்கொண்டு வரவேற்க
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும் - பூரண கும்பமும் பொற்குடம் வைத்து நாற்புறம் எங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான் - தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்
பெண் கேட்டு வாராராம் நாராயணன்..ஆனா மாப்பிள்ளை பெரிய இடமில்லியோ..அதனால நாலா பக்கமும் தோரணம் கட்டி சும்மா தெருவே களை கட்டி இருக்க, ஆயிரம் யானைகள் புடை சூழ அவர் கம்பீரமாக தெருக்களைச் சுற்றி வர (எதற்காக தெருக்களை வலம் வரணும் ஆமா இவர்தான் மாப்பிள்ளைன்னு ஊர் முழுக்கத் தெரிய வேணாமா அதுக்குத்தான் )
யானையில் வலம் வந்து இறங்கி கம்பீரமாக நடந்து வருகிறார் நாராயணன் .அவரை வரவேற்கும் பொருட்டு , பூரண கும்பம், பொன்னாலான குடத்தோட அவரை எதிர் கொள்கிறார்கள் .பெண் பார்க்க வர்றதுக்கே தோரணம் எல்லாம் தூள் கிளப்புது .வீட்டுல நல்லது நடக்குது என்பதற்கு அடையாளமாக தோரணம் கட்டுவது வழக்கம்.. கோதைக்குக் கல்யாணம்ல..அப்பக் கண்டிப்பா தோரணம் கட்டியே ஆகணும் :) நடந்து வரும் மாப்பிள்ளைக்கு ஆலத்தி கரைச்சு குங்குமம் வச்சு வரவேற்பது இன்றளவும் உள்ள வழக்கம்.
பின்ன கல்யாணம் என்றாலே வீடு களை கட்டிடும்ல..இன்னும் இருக்கு அடுத்தடுத்து பாப்போம் :)
நாச்சியாரின் பாடல் அழகு என்றால் அதற்கு துள்ளல் நடை யில் தாங்கள் கொடுத்துள்ள விளக்கம் இன்னும் அழகு. பின்னிட்டீங்க.
ReplyDelete