Tuesday, 7 June 2016

47.எத்திசை யுமம ரர்பணிந் தேத்தும்

47.எத்திசை யுமம ரர்பணிந் தேத்தும் 
பாடல் :47
எத்திசை யுமம ரர்பணிந் தேத்தும்
இருடீகே சன்வலி செய்ய
முத்தன்ன வெண்முறு வற்செய்ய வாயும்
முலையு மழகழிந் தேன்நான்
கொத்தலர் காவில் மணித்தடம் கண்படை
கொள்ளு மிளங்குயி லேஎன்
தத்துவ னைவரக் கூகிற்றி யாகில்
தலையல்லால் கைம்மாறி லேனே

விளக்கம் : 
எத்திசையும் அமரர் பணிந்து ஏத்தும் - எல்லா திசைகளிலும் வானவர்கள் வணங்கும்
இருடீகேசன் வலி செய்ய - ரிஷிகேஷன்  எனக்குக் காட்சி தராமல் என் மனம் வலிக்கச் செய்கிறான்
முத்தன்ன வெண்முறுவல் செய்ய வாயும் - முத்துப் போன்ற வெண்மையான பற்களோடு அழகாக முறுவல் செய்த என் வாயும்
முலையும் அழகு அழிந்தேன் நான் - என் முலைகளும் அழகு அழிந்தேன் நான்
கொத்து அலர் காவில் மணித்தடம் கண்படை - கொத்துக் கொத்தாக மலர்கள் கொண்ட சோலையிலே அழகிய இடம் தன்னில் உறக்கம்
கொள்ளும் இளங்குயிலே - கொள்ளும் இளங்குயிலே
என் தத்துவனை வரக் கூகிற்றி ஆகில் - என் தத்துவனை வரக் கூவுவாய் எனில்
 தலையல்லால் கைம்மாறிலேனே -  காலமெல்லாம் என் தலையை உன் பாதத்தில் வைத்து வணங்குவேன்..இதைத் தவிர வேறு கைம்மாறு எதுவும் அறிந்திலேன்

எல்லா திசைகளிலும் வானவர்கள் பணிந்து வணங்கும் (ரிஷிகேஷன் )  திருமால் எனக்குக் காட்சி தராமல் எனை வந்து சேராமல் என் மனத்தை வலிக்கச் செய்கிறான்..முத்துப் போன்ற வெண்மையான அழகாக புன்முறுவல் செய்த என் வாயும் , என் மார்புகளும் அவனைக் காணாத ஏக்கத்தினால் வந்த வேதனையில் அழகிழந்து போயின. சிரிப்பை மறந்தாள் இந்தப் பாவை. ஆகவே வாய் அழகு இழந்தது. எவனுக்காகப் படைக்கப்பட்டதோ இந்த முலைகள் அவன் தொடாமல் போனதால் பாழாகிப் போயின


பூங்கொத்துக்கள் நிறைந்த சோலையில் அழகியதோர் இடத்தினில் உறக்கம் கொள்ளும் இளங்குயிலே ..என் இறைவனை,  எனைச் சேர வரக் கூவுவாய் எனில் காலம் முழுதும் உன் பாதங்களில் என் தலை வைத்து நன்றியாய் இருப்பதைத் தவிர வேறு கைம்மாறு நான் அறியேன் ..
கோதையின் பாடல்கள் படிக்கப் படிக்க ,அவளுக்காகவே சில பாடல்கள் திரையில் வந்ததாகவே மனத்திற்குப்படுகிறது .

 ராசாவே உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
பொழுதாகிப் போச்சு விளக்கேத்தியாச்சு பொன் மானே உன்னத் தேடுது
ஸ்ரீராமனோட பூமாலை போட வைதேகி உள்ளம் வாடுது 
மங்கை ஒரு கங்கை என மன்னன் ஒரு கண்ணன் என காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன 
அத்தை மகனோ மாமன் மகனோ சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ 
சந்தித்ததும் சிந்தித்ததும் தித்திட 
அம்மாடி நீதான் இல்லாத நானும் 
வெண்மேகம் வந்து நீந்தாத வானம் 
தாங்காத ஏக்கம் போதும் போதும்..






No comments:

Post a Comment

மறுமொழி இடுக!