52.விண்ணுற நீண்டடி தாவிய மைந்தனை
விண்ணுற நீண்டடி தாவிய மைந்தனை
வேற்கண் மடந்தை விரும்பி
கண்ணுறவென்கடல் வண்ணனைக் கூவு
கருங்குயி லேஎன்ற மாற்றம்
பண்ணுற நான்மறை யோர்புது வைமன்னன்
பட்டர்பி ரான்கோதை சொன்ன
நண்ணுறு வாசக மாலைவல்லார்நமோ நாராய ணாயவென் பாரே
விளக்கம் :
விண்ணுற நீண்டு அடி தாவிய மைந்தனை - வானம் அளவு நீண்டு அடி தாவிய மைந்தனை
வேற்கண் மடந்தை விரும்பி - வேல் போன்ற கண்களை உடைய பெண் விரும்பி
கண்ணுற என் கடல் வண்ணனைக் கூவு - தான் பார்த்து மகிழ நேரில் வந்து சேர என் கடல் வண்ணனை வரக் கூவு
கருங்குயிலே என்ற மாற்றம் பண்ணுற - கருங்குயிலே என்று பத்துப் பாடல்களைப் பாடினாள்
நான்மறையோர் புதுவை மன்னன் - நான்கு மறை ஓதுபவர் வில்லிபுத்தூர் மன்னன்
பட்டர்பிரான் கோதை சொன்ன - பெரியாழ்வார் என்ற பட்டர் பிரான் மகள் கோதை சொன்ன
நண்ணுறு வாசக மாலை வல்லார் நமோ நாராயணாய என்போரே - நன்மை விளைவிக்கும் இந்தப் பா மாலையைப் பாடுபவர்கள் ,அவன் திருவடிகளில் நமோ நாராயணாய என்று கூறும் வல்லமை பெறுவார்
மடந்தை என்பதற்கு அழகான பொருள் உண்டு.. 14-19 வயது கொண்ட டீனேஜ் பெண்களைக் குறிக்கிறது .இளமை,இளமைக்குரிய அழகு ,இளமைக்குரிய மென்மை, அறியாமை குணம் கொண்டவளாம்..காதல் பித்தும் இந்த வயதில் பிடிப்பதும் இயற்கையே. உலகளந்த பெருமானை ,போர் தொடுக்கும் பலம் வாய்ந்த வேல் கொண்ட கண்ணினாள் இந்த மடந்தை கோதை , தான் கண்ணாரப் பார்த்து மகிழும் வண்ணம் அந்தக் கடல் வண்ணனை வரச் சொல்லி, குயிலிடம் தூதுப் பாமாலை பாடினாள் .. கண்ணுற என்பது மிக அழகான சொல்..வெறுமனே பார்ப்பது என்ற சொல் பெரிதாக உணர்த்தி விடாது .ஆனால் கண்ணுற என்பது மனத்தினால் அகம் மகிழ்ந்து ஆசை ஆசையாய் பார்ப்பது , பார்த்துப் பார்த்தும் தீராத அன்பு கொண்டது.. பார்ப்பதிலேயே மனம் நிறைவு கொள்வது..இத்தனை நாளும் வாழ்ந்ததே இப்படி உன்னைத் தரிசிக்கத்தான் என்று உணர்த்துவது . பார்வையிலேயே தின்பது ..மனசுக்கு நிறைஞ்சவனை கண்ணாரக் காண்பதும் பெரும் காதலே
வேதம் ஓதும் தொழிலைக் கொண்ட வில்லிபுத்தூர் மன்னன் பெரியாழ்வார் என்ற பட்டர்பிரான் மகள் கோதை சொன்ன இப்பாமாலையை பாட வல்லார்கள் "நமோ நாராயணாய "என்று கூறி என்றும் அவன் திருவடி கிட்டும் அருள்தனைப் பெறுவார்கள் .
காதலினால் , குயில் விடு தூது சொன்ன கோதையின் நாச்சியார் திருமொழி ஐந்தாம் பத்து இனிதே நிறைவுற்றது.. :)
அடுத்த பத்து மிகப் பிரபலமான "வாரணம் ஆயிரம் "
No comments:
Post a Comment
மறுமொழி இடுக!