45.என்புரு கியின வேல்நெடுங் கண்கள்
பாடல் :45என்புரு கியின வேல்நெடுங் கண்கள்
இமைபொருந் தாபல நாளும்
துன்பக் கடல்புக்கு வைகுந்த னென்பதோர்
தோணி பெறாதுழல் கின்றேன்
அன்புடை யாரைப் பிரிவுறு நோயது
நீயு மறிதி குயிலே
பொன்புரை மேனிக் கருளக் கொடியுடைப்
புண்ணிய னைவரக் கூவாய்
விளக்கம் :
என்பு உருகியின - என் எலும்புகள் உருகின
வேல் நெடுங் கண்கள் இமை பொருந்தா பல நாளும் - வேலினை ஒத்த நீண்ட என் கண்கள் இமை மூடவில்லை.
பல நாளும் துன்பக் கடல் புக்கு - பல நாட்களாகவே துன்பம் எனும் பெருங்கடலில் மூழ்கிக் கொண்டிருக்கிறேன்
வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன் - வைகுந்தன் என்பவனே எனக்கு அந்தக் கடலில் இருந்து மீட்கும் தோணியாக வர முடியும். அந்தத் தோணியைப் பெறமாட்டாமல் உழல்கின்றேன்
அன்புடையாரைப் பிரிவுறும் நோய் அது - அன்புக்கு உரியவர்களைப் பிரிந்து வாடும் நோய் பற்றி
நீயும் அறிதி குயிலே - நீயும் அறிந்திருப்பாய் தானே குயிலே!
பொன்புரை மேனிக் கருளக் கொடியுடைப் - பொன்னை ஒத்த மேனி கொண்ட , கருடனின் கொடி உடைய
புண்ணியனை வரக் கூவுவாய் ! - புண்ணியனை வரக் கூவுவாயாக !
(தோணி -படகு )
என்னவன் வர மாட்டானா என ஏங்கி ஏங்கிப் பசலை நோய் பீடித்து, என் எலும்புகள் உருகிப் போயின..வேலினை ஒத்த நீண்ட எனது கண்கள் தன் இமைகளை ஒருக்கணமும் மூடவில்லை தூக்கம் பிடிக்காமல்.. பல நாட்களாகவே துன்பம் என்னும் பெருங்கடலில் மூழ்கிக் கொண்டிருக்கின்றேன். அந்தக் கடலில் இருந்து என்னைக் காப்பாற்றும் சக்தி கொண்ட தோணி வைகுந்தன் என்பவனே..அந்த வைகுந்தனைக் காணாமல் வேதனையில் உழன்று கொண்டிருக்கின்றேன்.. அன்புக்கு உரியவரைப் பிரிந்து வாடும் நோயைப் பற்றி நீயும் அறிந்திருப்பாய் தானே குயிலே !
கண்ணா உனைத் தேடுகிறேன் வா...
காதல் குயில் பாடுகிறேன் வா..
உன்னோடுதான் வாழ்க்கை
உள்ளே ஒரு வேட்கை..
காதல் என்னும் தீரவில்லை..கண்ணீர் இன்னும் ஓயவில்லை..
ஏன் இந்தக் காதல் என்ற எண்ணம் தடை போடுமா..
என் பாடல் கேட்ட பின்பும் இன்னும் பிடிவாதமா..
என்ன நான் சொல்வது இன்று வந்த சோதனை
மௌனமே கொல்வதால் தாங்கவில்லை வேதனை
உன்னைத் தேடி வந்தேன் உண்மை சொல்ல வேண்டும்..
நான் இந்தச் சோகம் கொள்ள நீ தான் காரணம்
ஆண்டாளுக்காகவே ஜானகி திரையில்பாடி வச்சிருக்காங்க.. (கடைசி வரி மட்டும் நான் மாத்திட்டேன் :) )
ஆண்டாளுக்காக இந்தப் பாடலை இளையராஜா சார்பாக சமர்ப்பணம் செய்வோம் .எங்க சுத்தினாலும் மனசு இறுதியாக ராஜாவிடமே அடைக்கலம் புகுகின்றது ..நம் எல்லா உணர்வுகளுக்கும் அவர் இசையில் ஆறுதல் இருப்பதால்..
No comments:
Post a Comment
மறுமொழி இடுக!