Saturday 6 February 2016

12.இன்று முற்றும் முதுகுநோவ

12.இன்று முற்றும் முதுகுநோவ
பாடல் :12
இன்று முற்றும் முதுகுநோவ 
இருந்திழைத்தஇச் சிற்றிலை,
நன்றும்கண்ணுற நோக்கிநாங்கொளும்
ஆர்வந்தன்னைத் தணிகிடாய்,
அன்றுபாலக னாகியாலிலை
மேல்துயின்ற எம்மாதியாய்,
என்றுமுன்றனக் கெங்கள்மேலிரக் 
கம்எழாததெம் பாவமே

விளக்கம் :
இன்று முற்றும் முதுகுநோவ - இன்று முழுவதும் முதுகு வலிக்க
இருந்து இழைத்த இச் சிறிய இல் ஐ - இருந்து பார்த்துப் பார்த்துச் செய்த இந்தச் சிறிய  வீட்டை
நன்று உம் கண்ணுற நோக்கி-  நன்றாக உன் கண்ணால் பார்
 நான் கொள்ளும் ஆர்வம் தன்னைத் தணிகிடாய் -  நான் கொள்ளும் ஆர்வத்தை நிறைவு செய்..(தணித்து விடு )
அன்று பாலகனாகி ஆல் இலை - அன்று குழந்தையாக ஆலிலை
மேல் துயின்ற எம்மாதியாய் - மேல் துயின்ற எம் ஆதியாய்
என்றும் உன்தனக்கு எங்கள் மேல் - என்றும் உனக்கு எங்கள் மேல்
இரக்கம் எழாதது எம் பாவமே - இரக்கம் எழாதது நாங்கள் செய்த பாவமே !

இன்று முழுவதும், முதுகு வலிக்க வலிக்க , பார்த்துப் பார்த்து செஞ்ச மணல் வீடு இது..


நோவ என்ற சொல் நோவுதல் என்பதன் வினையெச்சம் .கிராமத்தில் தான் இன்னமும் பல தமிழ்ச் சொற்கள் வாழ்கின்றன என நினைக்கிறேன்..நாகரீகமாகப் பேசுகிறோம் என்று பல நல்ல தமிழ்ச் சொற்களின் பயன்பாடுகள் அற்றுப் போய்விட்டன..இது போன்றவற்றைப் படிக்கும்போது அவை நினைவுக்கு வருகின்றன..இதைச் செய்ய உனக்கு என்ன நோவு என்று அம்மா திட்டுவதுண்டு..மனசு நோவுது..நோகடிக்காதே..இப்படிப் பயன்படும்..அதே போல இழைத்தல் என்ற சொல்லும்..இழைத்து இழைத்துச் செய்தேன் என்றால் வெறுமனே உழைப்பு மட்டுமல்ல..கண்ணும் கருத்துமாக ஒரு சிறு குறை கூட வராம கவனமாகப் பார்த்துச் செய்தல்..
கட்டுவது மணல் வீடே எனினும் அதையும் அழகாகச் செய்திருக்கிறாள்..
ஆண்டாள் கண்ணனைப் பார்த்துச் சொல்றாங்க..நன்று உம் கண்ணுற நோக்கி ன்னு..நல்லா கண்ணைத் திறந்து பாரு..
நன்றி கூகுள் 

"கண்ணாலே காதல் கவிதை சொன்னாலே உனக்காக 
கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக " 
திரைப்பாடல் நினைவுக்கு வருதே...
நான் கொள்ளும் இந்த ஆர்வம் தன்னைத் தணிகிடாய்..
நீ இப்படி கண்கொண்டு பார்த்தால் நான் கொள்ளும் ஆர்வம் தணியும்..
உனக்கான என் கனவுகள் கற்பனைகள் அனைத்தும் நீ ஏறெடுத்துப் பார்த்துவிட்டால் ,உன் கவனம் பெற்று விட்டால் என் ஆசை தணிந்து விடும்.
உன்னோடு நான் வாழ வேண்டும் என்பதே என் விருப்பம்..அதை நீ கண்டுகொண்டால் நான் விருப்பம் நிறைவேறியவள் ஆவேன்..


நான் வண்ணம் கொடுத்தது :) 
அன்று குழந்தையாக ஆல் (ஆலமரத்து ) இலை மேல் துயின்ற நீயே எம் ஆதியாவாய்..(எங்கள் முதலானவனே )
உனக்கு எங்கள் மேல் இரக்கம் இன்னும் வராமலிருப்பது நான் செய்த பாவமே..

இவ்வளவு தூரம் ஆசை ஆசையாய் மனக் கோட்டை கட்டுகிறாள்..அவளுக்காக இன்னமும் மனம் இறங்காமல் இருக்கலாகுமோ கண்ணா..!



No comments:

Post a Comment

மறுமொழி இடுக!