Monday 1 February 2016

4. சுவரில் புராணநின் பேரெழுதி

4.சுவரில் புராணநின் பேரெழுதி 

பாடல் :4
சுவரில் புராணனின் பேரெழுதிச்
சுறவநற் கொடிகளும் துரங்கங்களும்,
கவரிப் பிணாக்களும் கருப்புவில்லும்
காட்டித்தந் தேன்கண்டாய் காமதேவா,
அவரைப் பிராயந் தொடங்கிஎன்றும்
ஆதரித் தெழுந்தவென் தடமுலைகள்,
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்
தொழுதுவைத் தேனொல்லை விதிக்கிற்றியே

விளக்கம் : 
சுவரில் புராண நின் பேரெழுதிச்- சுவரில் கண்ணன் பெயரெழுதி
சுறவனற்கொடிகளும் - மீன் கொடிகளும்
துரங்கங்களும் - குதிரைகளும்
கவரிப் பிணாக்களும் - கவரி கொண்டு செய்த சாமரம் வீசும் பெண்களும்
கருப்பு வில்லும் - கரும்பு வில்லும்
காட்டித் தந்தேன் கண்டாய் காமதேவா - எல்லாம் உனக்கே வரைந்தேன் பார் காமதேவா
அவரைப் பிராயந் தொடங்கி - அவரைச் சிறு வயது முதலிருந்தே
என்றும் ஆதரித் தெழுந்தவென் தட முலைகள்  - என்றைக்கும் விரும்பி என் பெரிய முலைகள்
துவரைப் பிரானுக்கே - துவாரகை மன்னனாகிய கண்ணனுக்கே
சங்கற்பித்து - உரியது
தொழுது வைத்தேன் - என்று வேண்டி வைத்தேன்
ஒல்லை விதிக்கற்றியே - இதை விரைவாகச் செய்து என்னை அவருக்கே ஆட்படச் செய்வாயாக !

சுவரில்...நல்லாப் பார்த்துக்கிடுங்க..சுவரில் என்றுதான் எழுதி இருக்காங்க சுவற்றில் என்று எழுதல..அதனால் இனி பிழையாகச் சுவற்றில் என்று எழுதாதீங்க.. இந்த ஆண்டாள் ஆயிரத்தில் ஒருத்தி..
"ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ..
உலகம் அறிந்திடாத பிறவியம்மா நீ..
பார்வையிலே குமரியம்மா பழக்கத்திலே குழந்தையம்மா
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ "

பாலிலும் வெண்மை பனியிலும் மென்மை ..
பச்சை இளங்கிளி மொழி நீ சொல்வது உண்மை..
பாவிகள் நெஞ்சம் உரைத்திடும் வஞ்சம் உண்மை எனச் சொல்வதற்கு தெய்வமும் அஞ்சும்..
ஆதாரம் நூறென்று ஊர் சொல்லலாம்..
ஆனாலும் பொய் என்று நான் சொல்லுவேன்..
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ..
கண்ணதாசன் எழுதிய இந்தத் திரைப்பாடலை ஆண்டாளுக்குச் சமர்ப்பிக்கறேன்..ஒரு பெண் இப்படி எழுதலாமா..? பெண் அங்கமான முலை குறித்து?  ஐயோ இது பெண்ணிய கட்டமைப்புக்கு அடுக்குமா கடுக்குமா என்றெல்லாம் இல்லாமல் மனதில் உள்ளதை உள்ளபடி, ஆண்டவனிடம் எந்த விதப் பாசாங்கும் இன்றிச் சொல்கின்றாள் தன் காதலை..:) 

"பெண்ணோடு தோன்றி பெண்ணோடு பெண்ணோடு வாழ்ந்தும் பெண் மனது என்னவென்று புரியவில்லையோ .."

இப்ப ஏன் திடீர்னு இந்தப் பாட்டுன்னா..சுவரில் புராணனின் பெயரெழுதி..ங்கற வாக்கியம் படிக்கவும்தான்.. வீட்டுல குட்டீஸ் தான் கிறுக்குவாங்க..ஆனா இங்க குமரி கிறுக்குகிறாள்..யார் பெயரை..? கண்ணன் பெயரையா காமன் பெயரையா..இரண்டுமே வர்ற மாதிரி இருக்கு வாக்கிய அமைப்பு...புராணனின் பெயர் என்றால் கண்ணன் பெயர் என்றே பொருள்படும்..புராண  நின்பெயரழுதின்னு தனியா வாசிச்சு பின்னால் காமதேவா என அழைக்கிறதையும் சேர்த்து வச்சுப்பார்த்தா காமனை சொல்லுவது போலத் தோன்றும் :) இந்தப் பெண் கள்ளச்சியப்பா...காமனைப் புகழ்வது போல் தன் தலைவனையும் எண்ணி மகிழ்ந்து கொள்கின்றாள். :) 
சுறவநற்கொடிகளும் - மீன் கொடித் தேர் மன்மதனுக்கு உரியது  ..மீன் கொடித் தேரில் மன்மதராஜன் ஊர்வலம் போகின்றான்.. திரைப் பாட்டு நினைவுக்கு வருதுல்ல .மீன் கொடிகளும் குதிரைகளும் ,கவரி கொண்டு செய்த சாமரம் வீசும் பெண்களும் கரும்பு வில்லும் உனக்கே தந்தேன்..
இப்பாடலுக்காகப் பொருள் தேடிய பொழுது,  இதிலே சுவராசியமான தகவல் கிட்டியது..கவரி மான் என்ற ஒன்றே இல்லையாம்..கவரி மா (எருமை -Yak ) யாம்..பனி மலையில் வாழும் அந்த எருமைக்கு அதன் கவரி -மயிர் ) மட்டுமே பாதுகாப்பு..அது இல்லை எனில் அது குளிர்தாங்காமல் இறந்திடும்..மானுக்கு அதன் தோலே பாதுகாப்பான ஒன்றுதானாம்..மானாக இருக்குமோ என்றெண்ணி இணையத்தில் தேடினால் கஸ்தூரி மான் தான் காட்டுது கவரி மான் இல்லை..ஆனா திருக்குறள் (மயிர் நீப்பின் வாழாக் கவரி மா ) ஆங்கில விளக்கத்தில் தெளிவாக yak என்றே குறிப்பிட்டு இருக்காங்க..காட்டெருமை..
கவரி எருமை என்றால் சற்றே ஏளனமா இருக்குமுன்னு கவரி மான் ன்னு வச்சுட்டாங்களா..ஒருவேளை யாராவது கவரி மான் இதுதான் ,நாங்க பார்த்தோம்ன்னு வந்தீகன்னா இதை நான் மாத்திக்கறேன் :) ஏன்னா இது கவரி மானா ,கவரி எருமையான்னு கண்டுபிடிக்க நிறைய நேரம் செலவு செய்திருக்கிறேன் :) தமிழறிந்த நண்பரிடம் ஏகப்பட்ட குறுக்குக் கேள்விகள் :) 

இதன் உரோமங்கள் அவ்வளவு மென்மை போல..அதான் அதுல சாமரம் செய்திருக்காங்க..ஒரு பாடலில் எவ்வளவு செய்திகள் நமக்கு..பிணா என்றால் பெண்..(பெண் விலங்குகளுக்கு அதன் ஆண் இணை அளவுக்கு முடிகள் இருப்பதில்லை..மயில் ,சேவல் உட்பட ) சாமரம் வீசும் பெண்களோடு மீன்கொடித் தேரில் மன்மதராஜன் கரும்பு வில்லோடு போகிறாராம் :)

சிறுவயதில் இருந்தே ஆரம்பம் முதலே,  என்றும் தனக்குரியவன் இவன்தான் தன் தலைவன் என்று நினைத்திருந்த நெஞ்சம் என்னுது..என் பெரிய முலைகள்,  துவாரகை மன்னனாகிய கண்ணனுக்கே என உறுதி அளித்து வேண்டித் தொழுதிருந்தேன்..அம்மன்னனுக்கே என்னை உரியவள் ஆக்கி விடு!

என்னதான் காமம் மீது ஈடுபாடு இருந்தாலும் பிடிக்காதவன் தொட்டா பிடிக்கிறதில்ல பெண்களுக்கு..விரும்பியவனிடம் குளிரும் நிலவுகள் ,பிடிக்காதவனிடம் சுடும் சூரியன் ஆகிவிடுவார்கள்..கோதையும் அம்மரபு வழி வந்தவள்தானே.. அதான் இப்படிச் சொல்றாங்க..:)



1 comment:

  1. கஸ்தூரி மான் என்றால் புள்ளிமான்னா ? தங்களில் உரை எளிய முறையில் அறிந்து கொள்ள முடிகிறது . தங்கள் தமிழ் பணிக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete

மறுமொழி இடுக!