Wednesday 3 February 2016

8. மாசுடை யுடம்பொடு தலையுலறி

8. மாசுடை யுடம்பொடு தலையுலறி
பாடல் :8
மாசுடை யுடம்பொடு தலையுலறி
வாய்ப்புறம் வெளுத்தொரு போதுமுண்டு
தேசுடை திறலுடைக் காமதேவா
நோற்கின்ற நோன்பினைக் குறிக்கோள்கண்டாய்
பேசுவ தொன்றுண்டிங் கெம்பெருமான்
பெண்மையைத் தலையுடைத் தாக்கும்வண்ணம்
கேசவ நம்பியைக் கால்பிடிப்பாள்
என்னுமிப் பேறெனக் கருளுகண்டாய்

விளக்கம் : 
மாசுடை உடம்பொடு - அழுக்கேறிய உடம்புடனும் 
தலையுலறி-  எண்ணெய் கூடத் தேய்க்காத சரியாக வாராத தலையுடனும் 
வாய்ப்புறம் வெளுத்து  ஒருபோதும் உண்டு -     ருவேளை  உணவு உண்டு மெலிந்த காரணத்தால்  , சிவந்த இதழ்கள் வெளுத்து  
தேசு உடை திறல்  உடைக் காமதேவா -  ஒளி பொருந்திய, காதலர் தேகம் இணைக்கின்ற திறம்பெற்ற காமதேவா 
நோற்கின்ற நோன்பினைக் குறிக்கோள்கண்டாய் -  உன்னை நோற்கின்றேன்..என் நோன்பின் நோக்கம் கண்டு கொள் 
பேசுவது  ஒன்று உண்டு  இங்கு  எம்பெருமான்  - பேசுவது ஒன்று உண்டு இங்கு என் தலைவன் 
பெண்மையைத் தலையுடைத் தாக்கும்வண்ணம் - என் பெண்மையை தனக்கே முதன்மையாக்கிக் கொள்ளும்  வண்ணம்
கேசவ நம்பியைக் கால்பிடிப்பாள் - கேசவன் நம்பியின் மணவாட்டி ஆகி அவனுக்குச் சேவை செய்வாள் 
என்னும் இப்பேறு எனக்கு  அருளுகண்டாய் - ன்னும் பெரும் பேற்றை எனக்கு அருளுவாயாக !

வேறு சிந்தனையே இன்றி , தலைவனைச் சேர வேண்டும் என்ற ஒரே வேண்டுதலோடு நோன்பு நோற்றதில்,  ஒருவேளை மட்டுமே சாப்பிட்டு உடம்பு மெலிந்து இதழ்கள் வெளுத்துவிட்டன..சரியாக எண்ணெய் வைக்காம ,சரியா தலைவாராம இருந்ததுல தலை அழுக்கேறிப் போச்சு..சில நேரம் தலைக் குளித்து சரியாக் கூட காய வைக்காம அப்படியே தேமேன்னு இருந்துவிடுவதுண்டு..நினைப்பு செயல் யாவும் மாயனே :)
மலர்க்கணைகளால் அம்பு தொடுத்து காதலர்கள் தேகம் இணைக்கின்ற திறம் பெற்ற காமதேவா !என் நோன்பின் நோக்கம் தெரிந்துகொள்...
திருப்பரங்குன்றம் 
இங்கு நான் பேசுவது ஒன்றே உண்டு..அது எம் பெருமான் என் தலைவன் என் பெண்மையை தனக்கே முதன்மையாக்கிக் கொள்ளும் வண்ணம் கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும் இப்பேற்றை (பெருமையை எனக்கருள் செய்வாயாக !

இரண்டாவது பாடலில் நல்லா குளிச்சு முழுகித் தான காமதேவனுக்குப் பூஜை செய்தாங்க..அப்புறம் எப்படி அழுக்காச்சு..? என்னதான் குளிச்சாலும் தலை வாரிச் சீவணும்ல.தலைக்கு எண்ணெய் வைக்காம , சரியா வாராம இருந்தா தலை அழுக்காகும் அத்தோடு உடம்பும் அழுக்காகும்..ஒருவேளை காமனிடம் அழுது புரண்டு அடம் பிடித்ததில் உடம்பும் அழுக்காகி இருக்கக்கூடும் ..செய்யக்கூடிய பெண் தான் இவள் :)  சரியா சாப்பிடாம ஒருவேளை உணவு மட்டுமே சாப்பிட்டதில் உடல் மாற்றங்கள்  இது ஏற்படும்தானே..அதான் வாய் வெளுத்துப் போச்சாம்..
செக்கச் சிவந்தன விழிகள் 
கொஞ்சம் வெளுத்தன செந்நிற இதழ்கள்..(ஒரு நாள் யாரோ..திரைப் பாடல் ) 
நினைவுக்கு வந்தது..:) இப்படி எல்லாம் சிரமப்பட்டு அவள் நோன்பு நோற்கின்றேன் ..காதலர் தேகத்தை இணைக்கும் திறம் பெற்ற ஒளிபொருந்திய காமதேவா !அன்னிக்கு ஒரு பேச்சு இன்னிக்கு ஒரு பேச்சு இல்ல..என்னிக்கும் ஒரே பேச்சுத்தான் இங்க உண்டு..அது ஒன்னே ஒன்னு..நான் என் தலைவனையேச் சேரனும்..தலைவனை மட்டும்தான் சேரணும் .
அவள் பெண்மையைத்  தனதாக்கும் உரிமை அவன் ஒருவனுக்கே..ஒருத்தரைப் பார்த்ததுமே அப்படியே உயிர் உருவிச் சென்று விடுவார்கள்..இவள் பெண்மையை அப்படி களவாடிச் சென்று விட வேண்டும் என்கிறாள்..
அதென்ன கைப்பிடிப்போம்ன்னு சொல்லாம கால் பிடிப்போம் என்கிறாள் ?

இறைவனைச்சேர்வதில் அவன் பொற்பாதங்களில் சரணம் அடைதல்..அதனால் கால் பிடிக்கிறாள் எனக் கொள்ளலாம்..அல்லது ஓயாது ஒழியாது உலகளக்கும் பெம்மானை சற்றே ஆசுவாசப்படுத்த,  கால் பிடிக்கிறாள் ஆருயிர் மனைவியாக :) அப்படியான பெரும் பேற்றை அவளுக்கு அருள காமனை வேண்டுகிறாள்..


1 comment:

  1. „இரண்டாவது பாடலில் நல்லா குளிச்சு முழுகித் தான காமதேவனுக்குப் பூஜை செய்தாங்க..அப்புறம் எப்படி அழுக்காச்சு..?“

    மிக அருமை.

    ReplyDelete

மறுமொழி இடுக!