Friday 5 February 2016

11.நாமமாயிரம்

11. நாமமாயிர மேத்த நின்ற 

நாச்சியார் திருமொழி இரண்டாம் பத்து ஆரம்பம்..!

இந்தப் பத்துப் பாடல்களிலும் ,  தான் கட்டும் சிறு மணல் வீட்டை இடிக்காதே என்று குறும்பு செய்யும் கண்ணனிடம் வேண்டுகிறாள் கோதை. கண்ணனைத் தன்னுடைய சக தோழனாக நினைத்து , அவன் செய்யும் குறும்புக்காக செல்லச் சண்டையிட்டுக் கொள்கிறாள் :)

பாடல் :11
நாமமாயிர மேத்த நின்ற 
நாராயணாநர னேஉன்னை,
மாமிதன் மகனாகப்பெற்றா 
லெமக்கு வாதை தவிருமே,
காமன்போதரு காலமென் றுபங்
குனிநாள்கடை பாரித்தோம்,
தீமை செய்யும் சிரீதரா!எங்கள் 
சிற்றில்வந்து சிதையேலே 

விளக்கம் : 
நாமம் ஆயிரம் ஏத்த நின்ற - ஆயிரம் பெயர்களால் அடியார்கள் போற்றுகின்ற
நாராயணா நரனே -நாராயணனே நரனே
 உன்னை மாமி தன் மகனாகப் பெற்றால் - உன்னை மாமி (அத்தை ) தன் மகனாகப் பெற்றால்
எமக்கு வாதை தவிருமே - எங்களுக்குத் துன்பம் நீங்குமே
காமன் போதரு காலமென்று - காமன் வருகின்ற காலமென்று
பங்குனி நாள் கடை பாரித்தோம் -பங்குனி நாள் அவன் வரும் வழியில்
கடை விரித்தோம்..
தீமை செய்யும் சிரீதரா ! - எங்களை வீடு கட்ட விடாமல் இடையூறு செய்யும் ஸ்ரீ தரா
எங்கள் சிறு இல் வந்து சிதையலே - எங்களின் இந்தச் சிறிய வீட்டை நீ வந்து சிதைக்காதே

இல் - இல்லம் -வீடு
ஆயிரம் பெயர்களால் அடியார்கள் போற்ற நிற்கின்ற நாராயணனே நரனே!உன்னை மாமி (அத்தையாமாம்...மாமியாரை மாமின்னு சுருக்கமாச் சொல்றாங்க..விவரம் ) தன் மகனாகப் பெற்றால் எமக்குத் துன்பம் தீருமே !

காமன் காலமான பங்குனி மாதம் அது ஏன் பங்குனி மாதம்.. ? பட்டப் பகலில் பட்டயக் கிளப்பும் வெயில் காலம்..? முன்பு காமவேள் விழா அந்த மாதத்தில் தான் நடைபெற்றது..(ஏற்கனவே இதை வேறொரு பாட்டில் சொல்லி இருக்கு ) பின்னாளில் அது இந்திர விழா எனப் பெயர் மாற்றம்  பெற்றது..ஆகவே நீ வரும் காலத்தில் நீ வரும் வீதியில் கடை விரித்து வைத்தோம்..(ஓர் அழகான சொல் பாரித்தோம்.. பேச்சு வழக்கில் கூடச் சொல்வார்கள் ஏன் இப்படி கடை விரித்து வைத்திருக்கிறீர்கள் என ) காமனை வரவேற்றுக் கொண்டாடுதல்..
எங்களை வீடு கட்ட விடாமல் இடையூறு  செய்யும் சிரீ தரா...ஸ்ரீதரன் என்பதை கிரந்தம் தவிர்த்து எழுதி இருக்கிறார்..ஆண்டாள் வடமொழி பயன்படுத்திய இடங்களில் எல்லாம் கிரந்தம் தவிர்த்து இருக்கிறார்..
அது என்ன தீமை செய்யும் ?
என்னை இன்னும் வந்து சேராமல் என்னை வதைக்கும் ஸ்ரீதரன் என்றும் பொருள் கொள்ளலாம்...அல்லது நாங்கள் கட்டும் எங்கள் சிறிய மணல் வீட்டை சரியாகக் கட்ட விடாமல் இடையூறு செய்யும் குறும்புக்காரச் சிறீதரன் என்றும் கொள்ளலாம் :)



எங்களின் சிறய இல் (வீடு ) வந்து சிதைக்காதே..!


முதற் பத்து முழுவதும் காமனை நோன்பு நோற்றாள் கோதை..பங்குனி மாதம் மன்மத மாதம்..அதனால் அதற்கு முன்பிருந்தே நோன்பு ஆரம்பித்து விட்டாள்...இரண்டாம் பத்தில் நேரிடையாக கண்ணனிடமே பேசுகிறாள்..சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலிலேயே விழு என்றொரு சொலவடை உண்டு..தன் மனத்தில் எழும் ஆசைகள் பற்றி அவளே அறிந்து வைத்திருக்கிறாள்..கடவுளைக் காதலிப்பதும் கைப்பிடிப்பதும் நடக்கின்ற காரியமா..? தன் மனக்கோட்டை மணல் கோட்டை தான் ஆயினும் நான் இந்த கற்பனை உலகத்திலேயே வாழ்ந்துட்டுப் போயிடறேனே..யதார்த்தம் வேண்டாமேன்னு வாழ்ந்துட்டாங்க..இருந்தாலும் என் மணல் வீட்டைச் சிதைக்காதே நான் சிறுபிள்ளை என்று இறைவனிடம் இறைஞ்சுகிறாள் பேதைப்பெண் கோதை..



No comments:

Post a Comment

மறுமொழி இடுக!