Wednesday 10 February 2016

14.பெய்யுமாமுகில் போல்வண்ணா !

14.பெய்யுமாமுகில் போல்வண்ணா ! 
பாடல் : 14
பெய்யுமாமுகில் போல்வண்ணா ! உன்றன்
   பேச்சும்செய்கையும், எங்களை
மையலேற்றி மயக்கவுன்முகம்
   மாயமந்திரந் தான்கொலோ,
நொய்யர்பிள்ளைக ளென்பதற்குன்னை
   நோவநாங்க ளுரைக்கிலோம்,
செய்யதாமரைக் கண்ணினாயெங்கள்
   சிற்றில்வந்து சிதையேலே

விளக்கம் : 

பெய்யுமாமுகில் போல் வண்ணா - மழை பொழிவதற்கு முன் இருக்கும் கருமேகம் போன்ற நிறத்தவனே
உன்தன் பேச்சும் செய்கையும் - உனது பேச்சும் செயலும்
எங்களை மையல் ஏற்றி மயக்க - எங்களைக் காதல் போதை ஏற்றி மயக்க வைக்க
உன் முகம் மாய மந்திரம் தான் கொலோ - உன் முகம் தான் என்ன மாய மந்திரம் செய்ததோ ?
நொய்யர் பிள்ளைகள் என்பதற்கு - உன்னை நொய்நொய் என நொய்க்கும் பிள்ளைகள் அல்ல நாங்கள்.
உன்னை நோவ நாங்கள் உரைக்கிலோம் - உன் மனம் நோகும் படியா நாங்கள் எதுவும் சொல்ல மாட்டோம்.
செய்ய தாமரைக் கண்ணினா - தாமரை போன்ற கண்கள் உடையவனே
எங்கள் சிற்றில் வந்து சிதையலே - எங்கள் சிறு வீட்டை வந்து சிதைக்காதே!

மை - நல்ல கருமை..(அதிகமான இருள் ) மை இருட்டு , கண் மை
மையல் - எப்படி கருமையில் (இருளில் ) வழி தெரியாமல் தடுமாறுவோமோ ,போலவே உணர்ச்சி வழியில் தடுமாறுதல்..

பெய்யுமா முகில்..பெய்து விடுவோமோ என்ற நிலையில் இருக்கும் முகில் போன்ற கரு நிறத்தவனே ! இதையே திருப்பாவையில் ஆண்டாள் ஆழி(கடல்) மழைக் கண்ணா என்றிருப்பாள்.. மழை மேகம் எங்கிருந்து உருவாகிறது என்பதை அப்பொழுதே அறிந்தவள்..
ஓவியம் :கேசவ்
உனது பேச்சும் செய்கையும் எங்களை மையல் ஏற்றி மயக்க வைக்க உன் முகம் தான் என்ன மாயம் மந்திரம் செய்ததோ ?மையல் என்பது ஒருவகை காதல் மயக்கம்..காதல் பித்து..காம மயக்கம்.. உணர்வு வழிச் செல்லுதல்..அதன் போக்கு தெரியாமல் அதிலேயே லயித்தல்..பல தமிழ்த்திரைப் பாடல்களில் இச்சொல் வரும்.
மாலையில் சந்தித்தேன் 
மையலில் சிந்தித்தேன்..
மங்கை நான் கன்னித்தேன் 
காதலன் தீண்டும் போது கைகளை மன்னித்தேன்..இது ஒரு பழைய திரைப்பாடல்.
"மையல் தந்திடும் வார்த்தைகளே மோகமென்னும் நெருப்பினைப் பொழிகிறது.."(இதழில் கதை எழுதும் நேரமிது )
இப்படி பல திரைப்பாடல்களில் மையல் மையம் கொண்டிருக்கிறது :) 

நன்றி :கூகுள்
காதல் வந்தாலே அங்கு அனிச்சையாக மையலும் வந்துவிடும் :) யாராவது ஓயாம பேசுறப்ப நொய்நொய் என்பார்கள்.... நையப்புடைத்து ..நொய்ய ..அது போல..நாங்க ஏதோ உன்கிட்ட நொய்நொய்ன்னு பேசுறதா நினைச்சுடாத ..உன் மனசு நோக நாங்க ஒன்னும் சொல்லிட மாட்டோம்..ஆகவே தாமரை போன்ற கண்ணினை உடையவனே எங்களின் சிறிய மணல் வீட்டை , வந்து சிதைக்காதே..







No comments:

Post a Comment

மறுமொழி இடுக!