Wednesday 24 February 2016

24.பரக்க விழித்தெங்கும் நோக்கி

24.பரக்க விழித்தெங்கும் நோக்கி
பாடல் :24
பரக்க விழித்தெங்கும் நோக்கிப்
பலர்குடைந் தாடும் சுனையில்
அரக்கநில் லாகண்ணநீர்கள்
அலமரு கின்றவா பாராய்
இரக்கமே லொன்று மிலாதாய்
இலங்கை யழித்த பிரானே
குரக்கர சாவதறிந்தோம்
குருந்திடைக் கூறை பணியாய்

விளக்கம் :
பரக்க விழித்து எங்கும் நோக்கி -  நால் திசையெங்கும் திருதிருவென விழித்து நோக்கி
பலர் குடைந்தாடும் சுனையில் - பலர் குடைந்து நீராடும் சுனையில்
அரக்க நில்லா கண்ண நீர்கள் - அடக்கியும் நில்லாமல் கண்ணீர்கள்
அலமருகின்றவா பாராய்- தளும்புகின்றன பாராய்
இரக்கமேல் ஒன்றும் இலாதாய் - கொஞ்சம்கூட இரக்கம் இல்லாதவனே!
இலங்கை அழித்த பிரானே - இலங்கை அழித்த எம்பிரானே
குரக்கு அரசாவது அறிந்தோம் - குரங்கை வைத்து இலங்கையை வென்றவனே ,குரங்குகளின் தலைவனே !
குருந்து இடைக் கூறை பணியாய் - குருந்து மரத்தின் இடையே நீ வைத்திருக்கும் எங்கள் துணிகளைக் கொடு

அரக்கபரக்கத்  திருதிருவென விழித்தல் என்பார்கள்.அதாவது என்ன செய்வது என்றே அறியாது அறியாமையால் விழித்தல்.  அது போல , அரக்கபரக்க நால் திசையெங்கும் விழித்து நோக்கி, பலர் குடைந்தாடும் சுனையில் (சுனை - தானே இயற்கையாகத் தோன்றிய ஊற்று  ) எவ்வளவுதான் அடக்கியும் நிற்காமல் கண்ணீர் தளும்புகின்றனவாம் கண்களில். இப்படி அழும் நிலையில் நிற்கின்றோம் என அறிந்தும் , இரக்கம் ஒன்றும் இல்லாம வேடிக்கை பார்ப்பவனே!

குரங்குகளை வைத்து இலங்கையை அழித்தவனே.குரங்குகளின் அரசனாவது அறிந்தோம்..(மறைமுகமா குரங்கு எனத் திட்டுகிறாள் . மரத்தின் மீது அமர்ந்து இந்தச் சேட்டை செய்து கொண்டிருப்பதால் )

குருந்த மரத்தின் இடையே இருக்கும் எங்கள் துணிகளைத் தந்து விடு !
கண்ணன் இப்படி உடையைப் பிடுங்கி வைத்துக் கொண்டு செய்யும் குறும்புத்தனங்களால் எங்கே பல்லாரும் பார்க்க உடையின்றி தன் மானம் போய் விடுமோ என அஞ்சி கோதைக்கு அழுகை வருகின்றது. இருப்பினும் கண்ணன் முன் அழவும் விருப்பமில்லாமல் அதே நேரம் கண்களில் வருகின்ற கண்ணீரையும் அடக்க முடியாமல் கண்களில் கண்ணீர் தளும்ப தேக்கி நிற்கின்றாள்.

அழ வச்ச கடுப்புல குரங்குன்னு வேற திட்டுகிறாள் :) ஹா ஹா இதெல்லாம் தெய்வ நிந்தனையில் வராது .. காதலனைப் போடா லூசு என்பதை ஒப்ப இது :))


No comments:

Post a Comment

மறுமொழி இடுக!