Thursday 4 February 2016

10.கருப்புவில் மலர்க்கணைக் காமதேவனை

10.கருப்புவில் மலர்க்கணைக் காமதேவனைக் 
பாடல் :10
கருப்புவில் மலர்க்கணைக் காமதேவனைக் 
கழலினை பணிந்தங்கோர் கரியலற, 
மருப்பினை யொசித்துப்புள் வாய்பிளந்த 
மணிவண்ணற் கென்னை வகுத்திடென்று,
பொருப்பன்ன மாடம்பொ லிந்துதோன்றும் 
புதுவையர் கோன்விட்டு சித்தன்கோதை,
விருப்புடை யின்தமிழ் மாலை வல்லார் 
விண்ணவர் கோனடி நண்ணுவரே.

விளக்கம் : 
கருப்புவில் மலர்க்கணைக் காமதேவனை - கரும்பு வில்லும் மலர்க்கணைகளும் கொண்ட காமதேவன் 
கழலினை பணிந்து -   அவன் திருவடி பணிந்து 
அங்கு  ஓர் கரி அலற - அங்கே ஓர் யானை அலற 
மருப்பினை ஒசித்துப் -அதன் தந்தம் ஒடித்து
 புள் வாய்பிளந்த 
  பகாசுரன் என்ற கொக்கு அரக்கன் வாய் பிளந்த
மணிவண்ணனுக்கு என்னை வகுத்திடு  என்று -மணிவண்ணனுக்கு என்றே என்னை உரியவள் ஆக்கி விடு என்று 
பொருப்பு  அன்ன மாடம் பொலிந்து தோன்றும் -  லை போன்ற மாடங்கள் அழகாகத் தோன்றும் 
புதுவையர் கோன் விட்டுசித்தன் கோதை -  வில்லி புத்தூர் சான்றோர்  விஷ்ணு சித்தன்  மகள் கோதை 
விருப்புடையின் தமிழ் மாலை வல்லார் - விருப்பமுடன் பாடிய இந்தத் தமிழ் பாமாலையை பாடல் வல்லார் 
விண்ணவர் கோன் அடி நண்ணுவரே - விண்ணகத்தில் இருக்கும் அந்த பரமனடி நலம் பெறுவரே 

கரும்பு வில்லும் ,மலர்க்கணைகளும் கொண்ட காமதேவனின் திருவடிகள் பணிந்து ஆங்கோர் யானை அலற ,

ஆங்கோர் கரி அலற என்பது கண்ணனைக் கொல்ல கம்சனால் ஏவி விடப்பட்ட குவலய பீடம் என்ற யானை . அதன் தந்தத்தை ஒடித்துக் கொன்றவன் கண்ணன் .



பகாசுரன் என்ற கொக்கு அசுரன்  வாய் பிளந்த மணிவண்ணனுக்கே என்னை உரியவள் ஆக்கி விடு என்று,  மலை போன்ற அழகான மாடங்களை உடைய வில்லிபுத்தூர் சான்றோர்  விஷ்ணு சித்தன் எனும் பெரியாழ்வார் மகள்  கோதை விருப்புடன் சொன்ன இந்தப் பாமாலைகளைப் பாடுவோர் விண்ணகத்தில் இருக்கும் அந்தப் பரமனின் திருவடி சேர்ந்து நலம் பெறுவர்


இந்தப் பாட்டில் நான் மிக ரசித்தது ,விட்டு சித்தன் கோதை என்பது தான்..இதே மாதிரி திருப்பாவை 30வது பாடலிலும் பட்டர்பிரான் கோதை சொன்ன என்று வரும் ..என்னதான் பொண்ணுங்க உருகி உருகி கணவனைக் காதலித்தாலும் தன் பெயரோடு அப்பா பெயரைச் சேர்த்துச் சொல்வதில் அலாதி பெருமை கர்வம் அவர்களுக்கு..அப்பாவுக்கு உரிய மரியாதை செலுத்தும் இன்பம்..அனேகமா அப்பா பெயரை இணைச்சு எழுதின முதல் பெண் இவராகத் தான் இருக்கும்னு நினைக்கிறேன் :)  இப்பொழுது புரிகிறதா..இந்தக் கோதையின் மீது ஏன் இவ்வளவு ஈர்ப்பு எனக்கு வருகிறது என :) தான் கற்ற தமிழை தனக்கே என்றதாக்காமல் ,அவள் தகப்பன் பெயரை ஆங்காங்கே போட்டு விடுகிறாள்..உண்மைதானே..பெரியாழ்வார் மட்டும் ஒரு  இயல்பானவராக  நடந்து கொண்டிருந்தால்,  நமக்கு ஆண்டாள் கிடைத்திருக்க மாட்டாள்..

பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே!

நாச்சியார் திருமொழியில் முதற் பத்து இனிதே  நிறைவுற்றது.. !


No comments:

Post a Comment

மறுமொழி இடுக!