Thursday 11 February 2016

15.வெள்ளைநுண்மணல்

15.வெள்ளைநுண்மணல் 

பாடல் :15

வெள்ளைநுண்மணல் கொண்டுசிற்றில்
   விசித்திரப்பட, வீதிவாய்த்
தெள்ளிநாங்க ளிழைத்தகோல
   மழித்தியாகிலும், உன்றன்மேல்
உள்ளமோடி யுருகலல்லால்
   உரோடமொன்று மிலோங்கண்டாய்,
கள்ளமாதவா ! கேசவா! உன்
   முகத்தனகண்க ளல்லவே

விளக்கம் : 
வெள்ளை நுண்மணல் கொண்டு - வெள்ளை நுண்ணிய மணல் (கோலப்பொடி) கொண்டு
சிறிய இல் விசித்திரப் பட - சிறு வீடு அழகாக , பார்த்தாலே தனியாகத் தெரியும்படி
வீதிவாய்த் தெள்ளி - வீதியில் நீர் தெளித்து
நாங்கள் இழைத்த கோலம் அழித்தியாகிலும் - நாங்கள் இட்ட கோலத்தை நீ அழித்து சேட்டை செய்தாலும்
உன்றன் மேல் உள்ளம் ஓடி உருகல் அல்லால் - உன் மேல் எங்கள் சிந்தனை ஓடி உருகவே செய்கின்றதே தவிர
உரோடம் ஒன்றும் இலோம் கண்டாய் - வேறு ரோஷம் உன் மேல கோபம் ஒன்றுமே இல்லை பார்த்துக்கோ
கள்ள மாதவா கேசவா - திருட்டு மாதவா கேசவா
உன் முகத்தன கண்கள் அல்லவே - உன்  கண்களால் அள்ளிக்  கண்டால் எங்கள் வீட்டை அழிக்க மனம் வராது

வெள்ளை நுண்ணிய மணல் (கோலப்பொடி ) கொண்டு கோலம் போட்டு ,  சிறிய வீடு அழகாக  ,வீதியில் நீர் தெளித்து நாங்கள் பார்த்துப் பார்த்து போட்ட கோலத்தை நீ அழிச்சு அழிச்சாட்டியம் செஞ்சாலும் ,
என் கோலம் :)

உன் மீது மட்டுமே உள்ளம் செல்கின்றது..உன்னை நினைச்சு உருகுதே தவிர 
உன் மேல் எந்த ரோஷமும் (மன வருத்தமும் பகையும் ) எங்களுக்கு இல்லை கண்டாய்..
அடக் கள்ள மாதவா (திருட்டுப்பயலே ) கேசவா ! 
நன்றி :கூகிள் 
கள்ள மாதவனாம்..செல்லமா திட்டறாங்க..:) இவுக மட்டும் என்னவாம்..கள்ள கோதை :)

முகத்தன  கண்கள் ..முகத்தல் என்றால் இரண்டு வித பொருள்கள் உண்டு..ஒன்று smell (முகந்து )மோந்து பார்த்தல் ன்னு பேச்சு வழக்குல சொல்லுவோம் .இன்னொன்று அள்ளுதல்..
உதாரணம் : நீர் மோந்துட்டு (முகந்துகிட்டு ) வா..
"கனையிருள் வானங் கடன்முகந்து "
                                                      - கலித்தொகை (145)
கடல் நீரை வானம் முகந்து கொண்டதாம்..

மண் முகந்து  (அள்ளி ) நாங்க வீடு கட்டி இருக்கோம்..
நீ அதைக் கண்களால் அள்ளிப் பார்த்தா உனக்கு இடிக்க மனசு வராது..
கண்களால் எப்படி அள்ளி ன்னு யோசிக்காதீங்க..மனசுக்குப் பிடிச்ச ஒன்னை கண் கொட்டாம ஆசை தீரப் பார்த்தல்..ஒரு வித இரக்கத்தோட பார்த்தா உனக்கு இடிக்க மனசு வராது ..:) 
நன்றி :கூகுல் 
என் மனசுல நான் கட்டி வச்சிருக்க காதலையும் நல்லா முகந்து பாரேன்..மோந்து (smell ) பார்த்தால் ஒருவேளை அப்படியே முகந்துக்க (அள்ளிக்க ) ஆசை வருமோன்னு ஒரு நப்பாசை :) 




No comments:

Post a Comment

மறுமொழி இடுக!