103.நல்லஎன் தோழி நாக
பாடல் :103நல்லஎன் தோழி நாக ணைமிசை நம்பரர்
செல்வர் பெரியர் சிறுமா னிடவர்நாம் செய்வதென்
வில்லி புதுவை விட்டுசித்தர்தங்கள் தேவரை
வல்லி பரிசு வருவிப்ப ரேலது காண்டுமே
விளக்கம் :
நல்ல என் தோழி நாகம் அணை மிசை நம்பரர் - நல்ல என் தோழி ! நாகம் அணைத்து இருப்பவர் நம் பெருமான்
செல்வர் பெரியார் சிறு மானிடவர் நாம் செய்வது என் - செல்வந்தர் பெரியவர் ஆனால் நாமோ சிறு மானிடர் நாம் என்ன செய்வது ?
வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை - வில்லிபுத்தூர் விஷ்ணு சித்தர் பெரியாழ்வார் தங்கள் தேவரை
வல்லி பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே - தங்களால் முடிந்த அளவு (தங்கள் வல்லமைக்குத் தக்க ) வழிகளிலே அழைப்பாராகில் அப்பொழுது நாமும்அவரைக் காணலாம்
பரிசு - அன்பளிப்பு / வழி/செய்முறை /மானம் (இங்கே வழி என்ற பொருளில் வருகின்றது )
நல்ல என் தோழியே !
நாகம் அணைத்து இருப்பவர் நம் பெருமான் பெரியவர் ,செல்வந்தர் ஆனால் நாமோ சிறு மனிதர்கள் நாம் என் செய்வது?
வில்லி புத்தூர் விஷ்ணு சித்தர் என்ற பெரியாழ்வார் தங்கள் தேவரை தங்கள் வல்லமைக்குத் தக்க அழைப்பாராகில் அப்போது நாமளும் அவரைப் பார்க்கலாம்..
நான் அழைச்சேன் வரல சின்னப் பொண்ணு என அந்தப் பெரியார் நம் பெருமான் வரலையோ என்று தாழ்வு மனப்பான்மை வந்துடுச்சு அவளுக்கு..அதனால் அவங்கப்பாவைத் துணைக்கு இழுக்கிறாள்.. அவர்தான் பெரிய பெருமாள் பக்தராச்சே..அவர் விதம் விதமா பல வழிகளில் வணங்குவார் ஒருவேளை அவர் அழைச்சா அவர் வரக் கூடும்..அப்போ நாம அவரைக் காணலாம் என்கிறாள்..
பெரியாழ்வார் |
இதற்கு முன் இல்லாத வகையில் இந்தப் பத்தில் தன்னை மிகவும் தாழ்த்திக் கொள்கிறாள் கோதை..நாள் செல்லச்செல்ல அச்சம் வருவது இயல்பு தானே..இப்படியாக இருக்குமோ அப்படியாக இருக்குமோ என்றெல்லாம் எண்ணம் பலவாகச் செல்கிறது.. தன் தரத்துக்கு சான்றளித்தேனும் அவரை அடையத் தகுதி வந்துடுமா எனப் பார்க்கிறாள்.. பாம்பில் படுத்திருப்பவன் தானே அவனுக்கும் பாம்பைப் போல இரட்டை நாக்கு என்கிறாள்..அவள் கண்ட கற்பனை வாழ்வில் வந்து என்ன சொன்னானோ ..இப்ப சொன்னபடி வரலை என்கிறாள்..என்னையே தருகிறேன் அதிலே அவனே வெளிவரட்டும் எனத் தன் மனத்தை வெளிப்படுத்துகிறாள்..இதற்கு முன்பு வரை அவள் தானே நமக்கு வழி சொன்னாள் ?
இப்ப என்ன இருந்தாலும் நாம் அவனின் முன் சிறு மனிதர்கள் தானே தோழி..நாம் என்ன செய்வது என்று நம்மிடமே கேட்கிறாள்..
இன்னும் இவள் படும் துயரத்தை அதன் வீரியத்தை இனி வரும் பாடல்களில் சற்று வலியுடனே காண்போம்..
பத்தாம் பத்து நிறைவுற்றது ! ஆண்டாள் திருவடிகளே போற்றி !!!
No comments:
Post a Comment
மறுமொழி இடுக!