113.செம்மை யுடைய திருவரங்கர்
பாடல் :113
செம்மை யுடைய திருவரங்கர் தாம்பணித்த
மெய்ம்மைப் பெருவார்த்தை விட்டுசித்தர் கேட்டிருப்பர்
தம்மை யுகப்பாரைத் தாமுகப்ப ரென்னும்சொல்
தம்மிடையே பொய்யானால் சாதிப்பா ராரினியே
விளக்கம் :
செம்மை உடைய திருவரங்கர் - சிறப்பை உடைய திருவரங்கர்
தாம் பணித்த மெய்ம்மைப் பெருவார்த்தை விட்டு சித்தர் கேட்டிருப்பர் - கட்டளை இட்ட உண்மைப் பெரும்பொருளை பெரியாழ்வார் விஷ்ணு சித்தர் கேட்டிருப்பார்
தம்மை உகப்பாரைத் தாமும் உகப்பர் என்னும் சொல் - தம்மை விரும்புபவரை தாமும் விரும்புவார் என்னும் சொல்
தம்மிடையே பொய் ஆனால் சாதிப்பார் ஆர் இனியே - காப்பாற்றப் படாமல் அந்த இறைவனாலேயே பொய் ஆகிப் போனால் இனி யார்தான் சாதிக்க முடியும் ?
செம்மை உடைய திருவரங்கர் பெருமான் பணித்த உண்மை மறை பொருளை பெரியாழ்வார் கேட்டு அதன்படியே வாழ்ந்திருப்பார் .தான் சிரமேற்றுக் கொண்ட செயல்களை வாழ்வில் முறையாகக் கடைபிடித்தவர் என் தந்தை..
தம்மை விரும்பியவர்களை தானும் விரும்புவார் என்ற சொல் அந்த இறைவனாலேயே காப்பாற்றப் படாமல் பொய் ஆகிப் போனால் இனி யார்தான் சாதிப்பார் இங்கே ?
ஓம் நமோ நாராயணாய - ௐ -திரு எட்டெழுத்து
மேல் எழுந்ததோர் வாயுக் கிளர்ந்து
மேல் மிடற்றினை உள் எழ வாங்கி
காலும் கையும் விதிர்விதிர்த்து ஏறிக்
கண்ணுறக்கம தாவதன் முன்னம்
மூலமாகிய ஒற்றை எழுத்தை
மூன்று மாத்திரை உள்ளெழ வாங்கி
வேலை வண்ணனை மேவுதிராகில்
விண்ணகத்தினில் மேவலுமாமே
- பெரியாழ்வார் திருமொழி (374)
மூலமாகிய ஒற்றை எழுத்தை -ௐ
ஓம் - இங்கே ஒரேழுத்தாகவே கொள்ளப்படுகின்றது .
ஓம் - அவனுக்கும் எனக்கும் உறவு ( உயிர்களுக்கும் இறைவனுக்குமான உறவு )நமோ - எதுவும் எனதில்லை
நாராயணாய - என் எல்லாமும் நாராயணனுக்கே
தீந்தமிழில் அழகாகச் சொல்ல வேண்டுமானால் அரங்கனால் நான் அரங்கனுக்காக நான்
இப்படி அடியவருக்கும் அரங்கனுக்குமான உறவைக் குறிக்கும் இந்த மெய்ம்மைப் பெருஞ்சொல்லே பொய்யாகிப் போனால் இனி நான் பேச என்ன இருக்கிறது..எப்படி சாதிப்பேன்?யார் தான் என்ன செய்ய முடியும் ?
அப்பொழுது தவளை வேதனையுடன் சொன்னதாம்.. "வேறு எவரேனும் என்னைத் துன்புறுத்தினால் இராமா என்று உன் பெயரைச்சொல்லி அழைப்பேன்..துன்பம் தந்தவரே இராமனாகிப் போனால் நான் யார் பெயரைச்சொல்லி அழைப்பது? " என்று
உண்மைப் பெரும் பொருளைக் கடைப்பிடித்தவர் அவரது
முகத்துக்காகவாவது நீ இறங்கி வந்து எனக்கு இரக்கம் காட்டலாமே என்று சிறுபிள்ளை போலப் பேசுகிறாள் இந்தக் கோதை எனும் பேதை.. காதல் பெருகப்பெருக மனம் பித்துக் கொண்டு பேதலித்து விடுகிறது..ஆரம்பம் முதல் இப்பொழுது வரையிலான ஆண்டாளின் மனநிலைகள் படிப்படியாக எப்படி தடுமாறி இருக்கிறது என்று இதுவரை வந்த பாடல்கள் மூலம் அறியலாம்.. .. நீயே அந்த திரு எட்டெழுத்து வாக்கை மீறினால் இனி நான் என்ன சாதிக்க முடியும் யார் தான்சாதிப்பார் இனி..
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி
நேத்து வரை சேர்த்து வச்ச ஆசைகள் வேகுதடி
நீ இருந்து நான் அணைச்சா நிம்மதி ஆகுமடி
காத்திருப்பதன் விளிம்பில் நின்று கொண்டு ஆண்டாள் மொழிகிறாள் . அரங்கர் வருவார் என்று ஏங்கி இத்துன்பத்தில் இருந்து மீள்வோம் என்ற எண்ணம் அடியோடு வற்றி விட்ட மொழி இது.
நாச்சியார் திருமொழி பதினோராம் பத்து நிறைவுற்றது !
No comments:
Post a Comment
மறுமொழி இடுக!