106.பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்
பாடல் :106பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்
அங்காதுஞ் சோராமே யாள்கின்ற வெம்பெருமான்
செங்கோ லுடைய திருவரங்கச் செல்வனார்
எங்கோல் வளையா லிடர்தீர்வ ராகாதே
விளக்கம் :
பொங்கு ஓதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் - பொங்கும் அலைகள் சூழ்ந்த நிலமும் விண் உலகும்
அங்கு யாதும் சோராமே ஆள்கின்ற எம் பெருமான் - எந்தக் குறையும் இன்றி, தளர்வின்றி ஆள்கின்ற எம் பெருமான்
செங்கோல் உடைய திருவரங்கச் செல்வனார் - செங்கோல் உடைய திருவரங்கச் செல்வனார்
என் கோல் வளையால் இடர் தீர்வர் ஆகாதே - என் கை வளையாலா துன்பம் தீரப் பெறுவார் ? ஆகாதே
பொங்கும் அலைகள் சூழ்ந்த நிலமும் , விண் உலகமும் அங்கு ஒரு குறைவுமின்றி தளர்வின்றி ஆள்கின்ற எம் பெருமான் செங்கோலை உடைய திருவரங்கச் செல்வனார் என் கோல் வளைகளால் தானா துன்பம் தீர்வார் ?ஆகாதே
கடல் சூழ்ந்த இந்த நிலத்தையும் அந்த விண்ணுலகையும் ஆள்கின்றார் .. செங்கோல் கொண்டவர் திருவரங்கத்துச் செல்வன்..இத்தகைய அரசன்,செல்வனுக்கு என் கை வளையல் மீது அப்படி என்ன ஆசை? அதைத் திருடிக் கொள்வதால் அவருக்கு இடர் தீர்ந்து விடுமோ ? இப்படி ஒரு அரசனே தன்னை நம்பியுள்ள குடியானவளின் வளையலை வலியப் பெற்றால் நான் எங்கு செல்வது? இதனால் அவருக்கு ஆகப் போறது என்ன ? எவ்வளவோ செல்வம் வைத்திருக்கும் செல்வன் அவர்..அப்பெருஞ் செல்வனாருக்கு என் கோல் வளை மீது அப்படி என்ன ஈர்ப்பு?
எப்பேர்ப்பட்ட செல்வந்தர் ,அவருக்கு என்னுடைய வளையலா இடர் தீர்க்கப் போகின்றது..என்று தனக்குத்தானே கேள்வி கேட்டுக் கொள்கிறாள்..
ஒரு வகைப் புலம்பலும் கூட..
No comments:
Post a Comment
மறுமொழி இடுக!