114 .மற்றிருந் தீர்கட் கறியலாகா
பாடல் :114
மற்றிருந் தீர்கட் கறியலாகா
மாதவ னென்பதோ ரன்புதன்னை
உற்றிருந் தேனுக் குரைப்பதெல்லாம்
ஊமைய ரோடு செவிடர்வார்த்தை
பெற்றிருந் தாளை யொழியவேபோய்ப்
பேர்த்தொரு தாயில் வளர்ந்தநம்பி
மற்பொருந் தாமற் களமடைந்த
மதுரைப் புறத்தென்னை யுய்த்திடுமின்
விளக்கம் :
மற்று இருந்தீர்கட்கு அறியலாகா - என்னோடு மாற்றுக் கருத்து கொண்டவர்க்கு என் வேதனை உங்களுக்குத் தெரியப் போவதில்லை
மாதவன் என்பதோர் அன்புதன்னை - மாதவன் மீது அன்பு
உற்றிருந்தேனுக்கு உரைப்பது எல்லாம் - கொண்டிருக்கும் எனக்கு நீங்கள் பேசுவது எல்லாம்
ஊமையரோடு செவிடர்வார்த்தை - ஊமைகளும் செவிடர்களும் பேசிக் கொள்வது போன்றது
பெற்றிருந்தாளை ஒழியவே போய்ப் - பெற்ற அன்னையான வாசுகியைப் பிரிந்து
பேர்த்தொரு தாயில் வளர்ந்தநம்பி - நீங்கிவிட்டு வேறொரு தாய் யசோதையிடம் வளர்ந்த நம்பி
மற் பொருந்தாமல் களம் அடைந்த - மற் போரில் போர் புரிவதற்கு முன்பே களம் அடைந்த கண்ணன் இருக்குமிடமான
மதுரைப் புறத்து என்னை உய்த்திடுமின் - மதுரையில் என்னைக் கொண்டு சேர்த்து விடுங்கள்
பலருக்கும் நாச்சியார் திருமொழி எழுதியது ஆண்டாள் தானா/ ஒரு பெண் அவளுக்கான கட்டமைப்புகளை மீறி இப்படி எழுத முடியுமா? என்ற ஐயம் உள்ளது..அவர்களுக்காகவே இந்த முதல் வரி.. என்னோடு மாற்றுக்கருத்து கொண்ட உங்களுக்கு என் உணர்வுகள் புரியாது..இந்தக் காலத்திலேயே அவளைப்பற்றி இப்படி பலர் எண்ணுகையில் அந்தக் காலத்தில் எவ்வளவு தூற்றினார்களோ..? அதுவும் அக்காலத்தில் பால்ய விவாகம் எளிதாக நடந்த ஒன்று.. ஆனால் இந்தப் பெண்ணோ "மானிடர்க்கென்று பேச்சுப்படில் வாழ்கில்லேன் " என்று உறுதிபடக் கூறியவள்.. இவளின் உறுதி பலரை வியப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தி இருந்திருக்கும்..சிலர் அவள் மேலான அன்பில் கூட ஆண்டாளுக்கு அறிவுரை செய்திருக்கக்கூடும் ..நீ கொண்ட காதல் நிறைவேறாது என.. யார் யார் என்ன சொல்லியும் மாதவன் மீது கொண்ட மையலில் இருந்து அவள் வெளியே வந்தாளில்லை..அவளது அன்பின் தீவிரம் அவளோடு மாற்றுக்கொண்டோருக்குப் புரிய வாய்ப்பில்லை என்கிறாள்..அதுவே உண்மை.
யார் என்ன வேண்டுமானாலும் பேசுங்கள் உங்களுக்கு என்னைப்பற்றி புரியப் போவதில்லை..மாதவன்பால் தீராத அன்பு கொண்ட எனக்கு நீங்கள் பேசுவது எல்லாம் என் தலையில் ஏறவில்லை..ஊமையர்களும் செவிடர்களும் உரையாடிக் கொண்டால் எப்படி பொருளற்றதாக இருக்குமோ அதைப் போலவேதான் இருக்கிறது என்னிடம் நீங்கள் சொல்லும் அறிவுரைகள் எல்லாம். போதும் வேண்டுமானால் ஒன்று செய்யுங்கள்.. பெற்ற தாயான வாசுகியிடம் இருந்து போய் அவளை நீங்கி வேறொரு தாயிடம் வளர்ந்தானே
நம்பி , மற்போரில் மல்லர்கள் வரும் முன்பே களத்தை அடைந்த ( எதற்காக மல்லர்களுடன் சண்டை போடும் முன்பே இருக்கும் கண்ணன் வேண்டுமாம்.. மற்போர் என்பது ஒருவரை ஒருவர் கட்டி அணைத்தே சண்டை இடுவது.. கண்ணனை யாரும் கட்டிப் பிடிக்கும் முன்னமே எனக்கு வேணும்..இனி பிறிதொருவர் அவனைக் கட்டி அணைப்பதை நான் காணச் சகிய மாட்டேன் என்கிறாள் ) அந்த வடமதுரை மைந்தன் கண்ணன் இருக்கும் இடத்திற்கே என்னைச் சென்று சேர்த்திடுங்கள்..
அதுவே இந்தத் துன்பத்தில் இருந்து நான் உய்யும் ஒரே வழி !
No comments:
Post a Comment
மறுமொழி இடுக!