117.அங்கைத் தலத்திடை யாழிகொண்டான்
பாடல் :117
அங்கைத் தலத்திடை யாழிகொண்டான்
அவன்முகத் தன்றி விழியேனென்று
செங்கச்சுக் கொண்டுகண் ணாடையார்த்துச்
சிறுமா னிடவரைக் காணில்நாணும்
கொங்கைத் தலமிவை நோக்கிக்காணீர்
கோவிந்த னுக்கல்லால் வாயில்போகா
இங்குத்தை வாழ்வை யொழியவேபோய்
யமுனைக் கரைக்கென்னை யுய்த்திடுமின்
விளக்கம் :
அம் கைத்தலத்திடை ஆழி கொண்டான் - தமது அழகிய கைத்தலத்தில் சக்கரம் கொண்டவன்
அவன் முகத்தன்றி விழியேன் என்று - அவன் முகத்தைத் தவிர வேறு எதிலும் விழிக்க மாட்டேன் என்று
செம் கச்சுக் கொண்டு கண்ணாடை ஆர்த்துச் - செந்நிற ஆடையைக் கொண்டு தம் கண்களைக் கட்டி கொண்டிருக்கும் (கண்களுக்கு ஆடை அணிந்திருக்கும் )
சிறு மானிடவரைக் காணில் நாணும் - அந்தக் கண்ணனைத் தவிர வேறு மானிடரைப் பார்க்க விரும்பாமல் சிறு மானிடவர்களைக் காணச் சகியாமல் வெட்கும்
கொங்கைத் தலம் இவை நோக்கிக் காணீர் - என் கொங்கைகள் இருக்கும் இடத்தை நன்கு பாருங்கள்
கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா - கோவிந்தனைத் தவிர வேறு எவரும் அதைத் தொட முடியாது அவன் வாயன்றி வேறெவனுக்கும் தன்னை உண்ணக் கொடுக்காது
இங்குத்தை வாழ்வை ஒழியவே போய் - இவ்விடம் வாழ்வதை ஒழித்து போய்
யமுனைக் கரைக்கு என்னை உய்த்திடுமின் - யமுனைக் கரையில் என்னைச் சேர்த்து விடுங்கள்
கச்சு - மார்புக் கச்சு ஆடை
இங்குத்தை - இவ்விடம் - இங்குத்து - இங்கிட்டு
யமுனை ஆறு |
இவை கோவிந்தனுக்காகப் படைக்கப்பட்டவை.. கடவுளுக்குப் படைக்க வேண்டியதை சிறு நாய் நரி உண்ணுதல் முறை ஆகாது..(ஏற்கனவே ஒரு பாடலில் இதைச் சொல்லியும் இருக்கின்றாள் தற்பொழுது மீண்டும் நினைவூட்டுகின்றாள் ) இவை கோவிந்தன் ஒருவனைத் தவிர வேறொருவன் வாயில் போகாது.
இந்தத் துன்ப வாழ்வை ஒழித்து , எனை அழைத்துக் கொண்டுபோய் யமுனைக் கரைக்கே என்னைச் சேர்த்திடுங்கள் !
இது போன்றப் பாடல்களால்தான் ஆண்டாள் எழுதிய பாடல்கள் அவள் எழுதியது அல்ல அவள் பெயரில் பெரியாழ்வார் எழுதியது என்றெல்லாம் சொல்கின்றார்கள் போல..ஆனால் என் அடிமனம் தொட்டுச் சொல்கின்றேன் ஆண்டாள் அழுத்தக்காரி பிடிவாதக்காரி.. மிக உறுதியாக இவற்றை அவளேதான் எழுதியிருப்பாள்..அவளின் உறுதியைப் பல பாடல்களில் நாம் காணலாம்.. பெண் பாவனையில் பலர் எழுதலாம் வெற்றியும் பெற்றிருக்கலாம்.. ஆனால் பெண்ணாகவே இருந்து எழுதியதை இல்லை என மறுப்பது ,ஒரு பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் அவள் தன் உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடாது என்ற ஆதிக்க மனநிலையே . அல்லது இவ்வளவு ஆழமாக ஒரு பெண்ணால் எழுத முடியாது என்ற பிறழ்நிலை காரணமாகவும் இருக்கலாம்.. ஆனால் நான் நம்புகின்றேன் மனதார நம்புகின்றேன்
ஆண்டாள் திருவடிகளே போற்றி !!!
No comments:
Post a Comment
மறுமொழி இடுக!