108.பொல்லாக் குறளுருவாய்ப் பொற்கையில்
பாடல் :108பொல்லாக் குறளுருவாய்ப் பொற்கையில் நீரேற்று
எல்லா வுலகு மளந்துகொண்ட வெம்பெருமான்
நல்லார்கள் வாழும் நளிரரங்க நாகணையான்
இல்லாதோம் கைப்பொருளு மெய்துவா னொத்துளனே
விளக்கம் :
பொல்லாக் குறள் உருவாய்ப் பொற்கையில் நீர் ஏற்று - பொல்லாச் சிறிய உருவாக தன் பொன்னான கையில் நீர் ஏற்று
எல்லா உலகும் அளந்து கொண்ட எம் பெருமான் - எல்லா உலகங்களையும் கொண்ட எம் பெருமான்
நல்லார்கள் வாழும் நளிர் அரங்க நாகணையான் - நல்லவர்கள் வாழும் குளிர்/ பெருமை மிக்க அரங்க நாகணையான்
இல்லாதோம் கைப்பொருளும் எய்துவான் ஒத்து உளனே - இல்லாதவங்களிடம் இருந்து அவர்களின் கைப்பொருட்களையும் கவருவான் போல இருக்கிறான்
குறள் உரு..குறள் - குறுகிய உருவம்
ஏன் பொல்லாக் குறள் உரு..? பார்க்கச் சின்னப் பையனாட்டம் வந்துட்டு பெரிய பெரிய விசயங்களைச் செய்தது.. (மூர்த்தி சிறிது எனினும் கீர்த்தி பெரிது ) என்ன செய்தாராம் ? மாவலியிடம் மூவுலகங்களையும் கேட்டு அவனால் நீர் வார்க்கப்பட்டு அதை ஏற்றுக் கொண்டவன் .ஒரு விதத்தில் அதுவும் ஓர் அபகரிப்பு தானே.. அதனால் தான் இந்தப் பொல்லாதவன் பட்டம் .
நல்லவர்கள் வாழும் பெருமைமிகு திருவரங்கத்தில் நாகத்தை அணைத்துப் படுத்திருப்பவனைப் பார்த்தால் இல்லாதவர்களிடம் இருந்து அவங்க கைப்பொருட்களை எல்லாம் தனதாக்கிக் கொள்பவனைப் போல இருக்கிறான் (எளிமையா கொள்ளைக் காரன் என்கிறாள் ) ஏற்கனவே எல்லா உலகங்களையும் மாவலியிடம் இருந்து பிடுங்கியவன் தானே.. அதே போல என்னிடமும்
பார்க்கத்தான் குள்ளன் ஆனால் செய்த காரியமோ ஏமாற்றுவேலை..மாவலியையே ஏமாற்றி எல்லா உலகங்களையும் அளந்து பெற்றுக் கொண்டவனாயிற்றே.. அப்பேர்ப்பட்டவன் என்னை மட்டும் விட்டுடுவானா ? எவ்வளவு செல்வம் இருக்கு அவனிடம்.. எப்பேர்ப்பட்ட அரசன் அந்தத் திருவரங்கத்தான்..ஆனால் அவனைப் பார்த்தால் எதுவுமே இல்லாதவர்களிடம் வறியவர்களிடம் இருக்கின்ற கைப்பொருட்கள் அனைத்தையும் பிடுங்குபவனைப் போல இருக்கிறான்..
(பெரிய சொத்துக்களோ வேறு உடைமைகளோ எதுவும் இல்லாதவ நான்..ஏதோ அன்றாடக் கைப்பொருள் மட்டுமே..அதையும் கைக்கொள்ளுதல் நியாயமா ? )
அவனிடம் பறிபோன என் இதயம் அதனால் மெலிந்த என் உடல் , சரிந்து போன அழகான வளைவுகள் , மெலிந்ததில் கழன்று போன என் வளையல்கள் இப்படி ஒவ்வொன்றாகப் பிடுங்கிக் கொண்டிருக்கிறான் இன்னும் இருக்கின்ற அனைத்தையும் பிடுங்கிவிட்டுத் தான் விடுவான் போல
No comments:
Post a Comment
மறுமொழி இடுக!