115.நாணி யினியோர் கருமமில்லை
பாடல் :115நாணி யினியோர் கருமமில்லை
நாலய லாரும் அறிந்தொழிந்தார்
பாணியா தென்னை மருந்துசெய்து
பண்டுபண் டாக்க வுறுதிராகில்
மாணி யுருவா யுலகளந்த
மாயனைக் காணில் தலைமறியும்
ஆணையால் நீரென்னைக் காக்கவேண்டில்
ஆய்ப்பாடிக் கேயென்னை யுய்த்திடுமின்
விளக்கம் :
நாணி இனியோர் கருமமில்லை - வெட்கப்பட்டு இனி ஒரு செயலில்லை
நால் அயலாரும் அறிந்து ஒழிந்தார் - என் வீட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமே தெரிந்த இந்தச் செய்தி உற்றார் ஊரார் என அனைவருக்கும் தெரிந்து விட்டது
பாணியாது என்னை மருந்து செய்து - காலம் தாழ்த்தாது என் நோய்க்கு நீங்கள் மருத்துவம் பார்த்து
பண்டு பண்டாக்க உறுதிராகில் - முன்பு எப்படி இருந்தேனோ அதேபோல்
பண்டுவம் பார்க்க உறுதி உடையவராக இருப்பீர்கள் எனில்
மாணி யுருவா உலகளந்த - குள்ள உருவில் வந்து உலகளந்த
மாயனைக் காணில் தலைமறியும் - அந்த மாயனை நான் கண்டால் இந்நோய் குணமடைந்து நான் மீள்வேன்
ஆணையால் நீர் என்னைக் காக்க வேண்டில் - என் மீது ஆணையாக நீங்கள் என்னைக் காக்க வேண்டுமானால்
ஆய்ப்பாடிக்கே என்னை உய்த்திடுமின் - ஆயர்பாடியில் என்னைக் கொண்டு சேர்த்து விடுங்கள்
நால் - தொங்குதல்
பெண் பார்க்க வருதலே நம் வழமை..மாயக்கண்ணன் தேடி வருவான்..இவளை அவள் தகப்பனிடம் முறைப்படி பெண் கேட்டு மணம் முடிப்பான் செல்லலாம் அவனோடு கம்பீரமாக என்று எண்ணியிருந்தேன்..மானிடர்க்கு வாழ்க்கைப் பட மாட்டேன் என்று உறுதியாக இருந்தேன். ஆதலால் ருக்மணியைக் கைப்பிடித்தது போல திடீரென எங்கிருந்தேனும் தோன்றி என்னை அழைத்துச் செல்வான் என்றும் நினைத்திருந்தேன்.. ஆனால் அவன் வரவில்லை.. வரச்சொல்லி மேகம் குயில் பூ என அனைத்தையும் தூது அனுப்பியும் அவன் வரவில்லை.. ஆணிடம் தன் ஆசையைச் சொல்லும் பெண்களை இவ்வுலகம் எப்படிப் பார்க்கும் என நான் அறிவேன்.. ஆனால் இவர்களுக்காக என் விருப்பங்களை அடக்கிக்கொண்டு நான் முடங்கி இருக்க முடியாது..இனியும் வெட்கப்பட்டுக் கொண்டிருந்தால் முதலுக்கே மோசமாகிவிடும் .இனி வெட்கப்பட்டு ஆகப்போவது ஒன்றுமில்லை. இனி என்ன இருக்கு?
வம்புக்கு அலைந்து தொங்கும் அக்கம்பக்கம் , சுற்றத்தார் ஊரார் அனைவர்க்கும் என்னைப் பற்றியும் நான் இப்படி நீயே கதி என புத்தி பேதலித்து இருப்பது தெரிந்துவிட்டது. உடல் மெலிந்தேன் கை வளை இழந்தேன்.. சரிந்த வளைவுகள் காணாமற் போயின. நடலை நோய் கொண்டேன்.
ஓவியம் சண்முகவேல் |
பார்ப்பவர்கள் எல்லாம் முன்பிருந்த கோதையைக் காணோமே என்று கேட்கும் அளவுக்கு என் உருவம் மாறிவிட்டது. உங்களுக்கு உண்மையாகவே என் மீது அக்கறை இருந்தால், நான் முன்பிருந்தது போலவே எனக்கு மருத்துவம் பார்த்து (பண்டுவம் -மருத்துவம் ) என்னைப் பழைய உருவுக்கு கொண்டுவர உறுதி கொண்டீர்களேயானால் நொடியும் காலம் தாழ்த்தாது எனக்கு மருத்துவம் செய்யுங்கள்..குறள் (குள்ள ) உருவில் வந்த உலகளந்த உத்தமன் அந்த மாயனைப் பார்த்துவிட்டேன் என்றால் நான் மீண்டுவிடுவேன்..
என் மீது ஆணையாக நீங்கள் என்னைக் காக்க விரும்பினால் (சத்தியம் கேட்கிறாள் ) ஆயர்பாடிக்கு என்னைக் கொண்டு சேர்த்து விடுங்கள்..
நான் மீள இஃது ஒன்றே வழி.
என் மீது ஆணையாக நீங்கள் என்னைக் காக்க விரும்பினால் (சத்தியம் கேட்கிறாள் ) ஆயர்பாடிக்கு என்னைக் கொண்டு சேர்த்து விடுங்கள்..
நான் மீள இஃது ஒன்றே வழி.
No comments:
Post a Comment
மறுமொழி இடுக!