118.ஆர்க்குமென் நோயி தறியலாகா
ஆர்க்குமென் நோயி தறியலாகா
தம்மனை மீர்துழ திப்படாதே
கார்க்கடல் வண்ணனென் பானொருவன்
கைகண்ட யோகம் தடவத்தீரும்
நீர்க்கரை நின்ற கடம்பையேறிக்
காளிய னுச்சியில் நட்டம்பாய்ந்து
போர்க்கள மாக நிருத்தஞ்செய்த
பொய்கைக் கரைக்கென்னை யுய்த்திடுமின்
விளக்கம் :
ஆர்க்கும் என் நோய் அறியலாகாது - யாருக்கும் என் நோய் தெரிந்திருக்க நியாயம் இல்லை
அம்மனைமீர் துழதிப்படாதே - தாய்மார்களே ! உங்கள் உடல்வலி /பயணத் துன்பம் பற்றிப் பொருட்படுத்தாது ,
கார்க்கடல் வண்ணன் என்பான் ஒருவன் - கடல் வண்ணன் நிறத்தவன் ஒருவன்
கைகண்ட யோகம் தடவத் தீரும் - என் உடல் அவன் தொட்ட யோகம் அவன் தடவ இந்த நோய் தீரும்
நீர்க்கரை நின்ற கடம்பை ஏறிக் - குளக்கரையில் நின்ற கடம்ப மரம் ஏறி
காளியன் உச்சியில் நட்டம் பாய்ந்து - பாய்ந்து காளியன் என்ற பாம்பின் உச்சந்தலையில் ஏறி நடனம் ஆடி
போர்க்களமாக நிருத்தஞ் செய்த - போர்க்களமாக்கி அதனை நொறுங்கச்
செய்த
கரைக்கே என்னை உய்த்திடுமின் - அந்தக் குளத்தின் கரையிலேயே என்னைக் கொண்டு விட்டு விடுங்கள்
இவளுக்கு என்ன ஆச்சு ஏன் இப்படி இருக்கின்றாள் என்றெல்லாம் ஆளாளுக்குப் பேசுகின்றார்கள்..அவர்கள் யாருக்கும் என் நோய் இன்னதென்று அறியப்போவதில்லை . தாய்மார்களே ! இங்கிருந்து வெகுதூரம் பயணம் செய்வதால் ஏற்படும் உடல் வலி /துன்பங்களைப் பொருட்படுத்தாமல் என்னை அங்கே கூட்டிச் செல்லுங்கள்.. இந்த நோயானது அங்கே கருநீல வண்ணன் என்பவன் ஒருவன் இருக்கிறான் அவன் என் மேனி தடவ தீரும் ( கைகண்ட யோகம் என்பது அழகான சொல்லாடல் ..இவங்க கை தொட்ட ராசி இப்படி ஆகி இருக்கு என்று நாம் பேச்சு வழக்கில் இன்றும் பயன்படுத்துகின்றோம் அல்லவா..கண்ணனே தொட்டால் யோகம் தானே..அவர் தொட்ட யோகத்துல சட்டுன்னு நோய் விலகிடும்..
ஒரு குளக்கரையில் இருந்த கடம்ப மரத்தின் மீது ஏறி , பாய்ந்து அங்கிருக்கும் காளியன் என்ற பாம்பின் மீது நடனம் ஆடி ,பின்பு போர் புரிந்து அதனை நொறுங்கச் செய்த
ஆண்டாள் கண்ணன் வளர்ந்து வாழ்ந்ததாகச் சொல்லப்பட்ட ஒவ்வொரு இடங்களையாகப் பார்க்க விரும்புகின்றாள்..கண்ணன் லீலை புரிந்த இடங்கள் என ..
அவன் பாதம் பட்ட மண்ணே அவளுக்கு அருமருந்து !
அவன் பாதம் பட்ட மண்ணே அவளுக்கு அருமருந்து !
No comments:
Post a Comment
மறுமொழி இடுக!