116.தந்தையும் தாயுமுற் றாரும்நிற்கத்
பாடல் :116
தந்தையும் தாயுமுற் றாரும்நிற்கத்
தனிவழி போயினாள் என்னும்சொல்லு
வந்தபின் னைப்பழி காப்பரிது மாயவன் வந்துருக் காட்டுகின்றான்
கொந்தள மாக்கிப் பரக்கழித்துக்
குறும்புசெய் வானோர் மகனைப்பெற்ற
நந்தகோ பாலன் கடைத்தலைக்கே
நள்ளிருட் கணென்னை யுய்த்திடுமின்
விளக்கம் :
தந்தையும் தாயும் உற்றாரும் நிற்கத் - தந்தையும் தாயும் உற்றாரும் தவித்து நிற்க
தனி வழி போயினாள் என்னும் சொல்லு வந்தபின்னைப் - அவர்கள் பேச்சைச் செவி மடுக்காது தனி வழியே சென்றாள் என்னும் சொல்லும் வந்த பின்னே
பழி காப்பது அரிது மாயவன் வந்துருக் காட்டுகின்றான் - இனியும் பழி வராமல் காப்பது அரிது மாயங்கள் காட்டும் மாயோன் வந்து தன் உருவத்தைக் காட்டுகின்றான்
கொந்தளம் ஆக்கிப் பரக்கழித்துக் - குழப்பம் ஆக்கிப் பெரும்பழி விளைவித்து
குறும்பு செய்வானோர் மகனைப் பெற்ற - குறும்பு செய்கின்ற ஓர் மகனைப் பெற்ற
நந்தகோபாலன் கடைத் தலைக்கே - நந்தகோபாலன் வீட்டிற்கே
நள்ளிருட்கண் என்னை உய்த்திடுமின் - நள்ளிரவில் என்னைக் கொண்டு சேர்த்திடுங்கள்
மானிடர்க்கு வாக்கப்பட மாட்டேன்னு பிடிவாதம் செய்துவிட்டாள் மகள் .வயதும் ஏறிக் கொண்டே போகின்றது.. கட்டினால் கண்ணன் இல்லாவிடில் வாழ மாட்டேன் என்று சொல்கின்றாள்.. ? கடவுளைக் கணவனாக அடைவது அவ்வளவு சாத்தியமா என்ன ? பெற்றோரும் உற்றோரும் கவலை கொள்கின்றார்கள்.. கண்ணனைக் காண முடியாமல் கோதையின் உடல்நிலையும் மனநிலையும் நாளுக்குநாள் மோசமாகப் போகின்றது சிலர் கவலையாகப் பேசுறாங்க..பலர் ஏசுறாங்க.. தாய் தந்தைக்காகக் கூட கோதை மனம் மாற்றிக் கொள்ளவில்லை.. தந்தையும் தாயையும் தவிக்க விட்டு இவள் விருப்பப்படி தனி வழி போகிறாள் என இப்படி ஏச்சும் பேச்சும் வாங்கிய பின்னர் இனியும் பழி வராமல் காப்பது கடினம். (முழுக்க நனைந்த பின்னே முக்காடு எதற்கு என்கிறாள் ) மாயோன் கண்ணன் பல மாயங்களைக் காட்டும் கண்ணன்..மறக்க முயன்றும் முடியாத மாதவன் கண் முன்னே வந்து தன் வடிவைக் காட்டி காட்டிப் போவதில் இன்னமும் பித்தே பிடிக்கின்றது.
ஓவியம் சண்முகவேல் |
கண்ணனின் தாயோ தங்கையோ வித்தியாசமாகப் பார்க்கும் முன்னம் மாமனார் முன் சென்று நின்றால் இரக்கம் மேலிட உள்ளே விட்டு விடுவார் என்ற எண்ணமும் இருக்கலாம்...
வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்ய கண்ணன் பெண் கேட்டு பின்னர் அவன் கைப்பிடித்து அவனோடு யானையில் ஊர்வலமாக கம்பீரமாக வெளியே செல்ல வேண்டும் என ஆசைப்பட்டவள் இப்படி நள்ளிரவிலேனும் கொண்டு சேருங்கள் எனச் சொல்ல வைத்து விட்டாரே இந்தக் கண்ணன் :(
No comments:
Post a Comment
மறுமொழி இடுக!