119.கார்த்தண் முகிலும் கருவிளையும்
பாடல் : 119
கார்த்தண் முகிலும் கருவிளையும்
காயா மலரும் கமலப்பூவும்
ஈர்த்திடு கின்றன வென்னைவந்திட்
டிருடீகே சன்பக்கல் போகேயென்று
வேர்த்துப் பசித்து வயிறசைந்து
வேண்டடிசி லுண்ணும் போதுஈதென்று
பார்த்திருந்து நெடுநோக்குக் கொள்ளும்
பத்தவி லோசநத் துய்த்திடுமின்
விளக்கம் :
கார்த்தண் முகிலும் கருவிளையும் காயா மலரும் கமலப் பூவும் -கருமையான குளிர்ந்த முகிலும் , கருவிளைப் பூவும் , காயாம் பூவும் தாமரைப் பூவும்
ஈர்த்திடுகின்றன என்னை வந்து - ஈர்த்திடுகின்றன என்னை வந்து
வந்து இருடீகேசன் பக்கம் போகே என்று - இருடீகேசன் (ரிஷி கேசன் ) பக்கம் போ என்று
வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து வேண்ட -வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து உணவினை வேண்ட
அடிசில் உண்ணும்போது - அடிசில் உண்ணும்போது
ஈதென்று பார்த்திருந்து நெடுநோக்குக் கொள்ளும் - உணவு உண்ணும் காலம் இதுவென நெடுநேரம் முனிவர்களின் வரவை எதிர்நோக்கிக்காத்திருக்கும்
பத்தவிலோசநத்து உய்த்திடுமின் - பத்தவிலோசனத்தில் என்னைக் கொண்டு சேர்த்திடுங்கள்
கண்ணனை மறக்க முயன்றும் முடியவில்லை.. கருமைநிற குளிர்ந்த முகிலும், கருவிளை மலரும் , காயா மலரும் , கமலப் பூவும் தங்களின் நிறத்தினால் அந்தக் கண்ணனையே நினைவூட்டுகின்றன.. அந்நிறம் காரணமாகவே ஈர்க்கின்றன என்னை.. அவை எனைப் பார்த்து இருடீகேசன் (ரிஷிகேசன் ) பக்கம் செல்லேன் என்று சொல்வது போன்று உள்ளது .
பத்த விலோசனம் என்பது யமுனை ஆற்றின் கரையே உள்ள தலம் .ஒருநாள் கண்ணன்,பலதேவனுடனும் தங்கள் நண்பர்களுடனும் பசுக்களை மேய்த்துக் கொண்டிருந்தனர்..கண்ணனின் நண்பர்களுக்குக் கடுமையான பசி. அவர்கள் கண்ணனிடம் இதைச் சொல்ல, அதற்குக் கண்ணன் அருகே முனிவர்கள்"ஆங்கிரஸ் "என்ற வேள்வி செய்து கொண்டிருப்பதாகவும் அவர்களின் மனைவிகளிடம் தங்கள் பெயரைச் சொன்னால் அவர்கள் உண்ணுவதற்கு வேண்டிய உணவைத் தருவார்கள் எனச் சொல்லி அனுப்பி வைத்தான்.ஆனால் முனிவர்களோ நம்பாமல் அவர்களைத் திருப்பி அனுப்ப , கண்ணனோ அப்பெண்களிடம் தாங்கள் இவ்விடம் இருப்பதைச் சொல்லி உணவு கேட்கச் சொன்னான் .
பேச்சைக் கேளாமல் , அனைத்து வகை உணவுகளையும் எடுத்துக் கொண்டு கண்ணன் &பலதேவன் இருக்குமிடம் சென்று அவர்கள் இருவரையும் வணங்கி அவர்களுக்கும் ,நண்பர்களுக்கும் அடிசில் உணவைப் படைத்து மகிழ்ந்தனர்.
இதே போல ஒவ்வொரு நாளும் கன்றுகள் மேய்த்துக் களைத்து, வயிறு பசித்து ,உணவுக்காக அவர்கள் அங்கே காத்திருப்பதும் அவர்களுக்காக அப்பெண்டிர் உணவு அங்கு வந்து வழங்குவதும் வாடிக்கை ஆயிற்று.
பக்தம் - சோறு விலோசனம் - பார்வை - சோறு பார்த்திருக்கும் இடம் என இவ்விடம் வழங்கலாயிற்று..இப்படி கண்ணன் புழங்கிய இடங்களுக்கு எல்லாம் ஆண்டாள் தன்னை அழைத்துச் செல்ல வேண்டுகின்றாள்.. அந்த பத்த விலோசனத்துக்கே என்னை அழைத்துச் செல்லுங்கள் என்கிறாள்..
No comments:
Post a Comment
மறுமொழி இடுக!