136.கார்த்தண் கமலக் கண்ணென்னும்
பாடல் : 136
கார்த்தண் கமலக் கண்ணென்னும்
நெடுங்கயி றுபடுத்தி என்னை
ஈர்த்துக் கொண்டு விளையாடும்
ஈசன் றன்னைக் கண்டீரே
போர்த்த முத்தின் குப்பாயப்
புகர்மால் யானைக் கன்றேபோல்
வேர்த்து நின்று விளையாட
விருந்தா வனத்தே கண்டோமே
விளக்கம் :
கார்த் தண் கமலக் கண் என்னும் - கருத்த மேகத்திலே குளிர்ந்த தாமரை மலர் போன்ற கண்ணினால்
நெடுங் கயிறு படுத்தி என்னை - நீளமான கயிறைக் கொண்டு என்னைப் படுத்தி
ஈர்த்துக் கொண்டு விளையாடும் - என்னைக் கவர்ந்து கொண்டு என்னோடு விளையாடும்
ஈசன் தன்னைக் கண்டீரே - இறைவன் தன்னைப் பார்த்தீர்களா ?
போர்த்த முத்தின் குப்பாயப் - போர்வை போலப் போர்த்திய முத்துக்களினால் ஆன சட்டை கொண்டு
புகர்மால் யானைக் கன்றே போல் - ஒளிர்கின்ற கரும் யானைக் கன்றினைப் போல்
வேர்த்து நின்று விளையாட - வேர்க்க விறுவிறுக்க நின்று விளையாட
விருந்தாவனத்தே கண்டோமே - விருந்தாவனத்தே கண்டோமே
குப்பாயம் - மேற்சட்டை
புகர்மால் - புள்ளி / ஒளிரும் கருமை
கேள்வி : கருத்த மேகத்திலே குளிர்ந்த தாமரைக் கண்கள் போல அவனது கருத்த முகத்திலே உள்ள குளிர்ந்த தாமரை போன்ற கண்கள் நெடுங் கயிறு போல என்னை ஈர்த்து என்னைப் படுத்தி எடுக்கின்றது..என்னைக் கட்டிப் போடுகின்றது..அதற்குக் கட்டுண்டே கிடக்கின்றேன். இப்படித் தன் அழகிய தாமரைக் கண்ணினால் கட்டி என்னை ஈர்த்து விளையாடும் இறைவன் எனை ஆள்பவனைக் கண்டீர்களா ?
பதில் : முத்துக்களாலேயே போர்வை போர்த்தியது போன்ற ஓர் மேற்சட்டை அந்தக் கருத்த மேனியும் ஒளிர்கின்றது .(வேர்க்க விறுவிறுக்க அவன் விளையாடியதில் விளைந்த வியர்வைத் துளிகள் பார்க்க முத்துக்கள் போல பளபளவென ஒளிர்கின்றதாம் அவன் கருத்த மேனியில் அவையே சட்டை போன்று இருக்கின்றதாம் அந்தக் கண்ணனுக்கு ) அந்த வேர்வை முத்துக்கள்
யானை போன்ற உடம்பில் புள்ளி புள்ளியாக இருந்ததைக் குறிப்பிடுவதாகவும் கொள்ளலாம்.
கண்ணனை எந்த அளவுக்கு ரசித்து ருசிக்கிறாள் பாருங்கள்..அணு அணுவாக உச்சி முதல் பாதம் வரை முகர்கின்றாள் ..
காதலும் காமமும் ஒருங்கே இணையப் பெற்றவள் :)
புகர் என்றால் புள்ளிகள். புகர்முகவேழம் என்பது யானைகளின் முகத்தில் உள்ள புள்ளிகளைக்குறிக்கும்
ReplyDelete