120.வண்ணம் திரிவும் மனங்குழைவும்
பாடல் : 120
வண்ணம் திரிவும் மனங்குழைவும்
மானமி லாமையும் வாய்வெளுப்பும்
உண்ண லுறாமையு முள்மெலிவும்
ஓதநீர் வண்ணனென் பானொருவன்
தண்ணந் துழாயென்னும் மாலைகொண்டு
சூட்டத் தணியும் பிலம்பன்றன்னைப்
பண்ணழி யப்பல தேவன்வென்ற
பாண்டி வடத்தென்னை யுய்த்திடுமின்
விளக்கம் :
வண்ணம் திரிவும் மனங்குழைவும் - என் மேனி வண்ணம் மாறியது மனம் குழைந்து குழம்பித் தளர்வானது
மானம் இல்லாமையும் வாய் வெளுப்பும் - மானம் போனது சிவந்த வாய் வெளுத்துப் போனது
உண்ணல் உறாமையும் உள் மெலிவும் - உணவு பிடிக்காமல் போனது உள்ளத்தோடு உடலும் மெலிந்து போனது
ஓதநீர் வண்ணன் என்பான் ஒருவன் - அலைகள் பொங்கும் கடல் நீரின் வண்ணம் கொண்ட நீலவண்ணன் என்பவன் ஒருவன்
தண் அம் துழாய் மாலை கொண்டு சூட்டத் தணியும் - குளிர்ந்த அழகிய துளசி மாலை கொண்டு எனக்குச் சூட்டத் தணியும் இந்நோய்
பிலம்பன் தன்னை பண் அழியப் பலதேவன் வென்ற பாண்டி வடத்தென்னை உய்த்திடுமின் - பிலம்பன் என்னும் அரக்கனை அழித்து பலதேவன் வென்ற இடமான பாண்டீர வடம் என்னும் இடத்திற்கே என்னை அழைத்துச் செல்லுங்கள்
ஒருக்கணம் கூட மறவாமல் அந்தக் கண்ணனையே நினைத்து நினைத்து வருந்தியதில் உடல் மெலிந்தது.. பசலை நோய் கண்டது..மேனி நிறம் பொலிவிழந்து நிறம் மாறியது..மனம் குழைந்தது..மனம் பித்து நிலை அடைந்தது.. குழம்பித் தளர்ந்தது.. உற்றார் ஊரார் நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு வம்பு பேசும் அயலார் எல்லாருக்கும் வம்பின் கருப்பொருள் ஆகி மானம் போனது..பருவம் வந்தும் வேறு மானிடவரைத் திருமணம் செய்ய மறுத்து கண்ணன் ஒன்றே என் தவம் என இருந்ததில் கேட்காத பேச்செல்லாம் கேட்க வேண்டிய நிலை. சிவந்த அதரங்கள் வெளுத்தன.. உணவு உண்ணப் பிடிக்கவில்லை.அதனால் உடலும் உள்ளமும் சேர்ந்தே மெலிந்தது.
ஓவியம் இளையராஜா |
செக்கச் சிவந்தன விழிகள்
கொஞ்சம் வெளுத்தன செந்நிற இதழ்கள்
இமை பிரிந்தது உறக்கம்
நெஞ்சில் எத்தனை எத்தனை மயக்கம்
நில்லடி என்றது நாணம்
விட்டுச் செல்லடி என்றது ஆசை..)
அலைகள் பொங்கும் .கடலின் நிறத்தவன் நீலவண்ணன் என்பவன் ஒருவன் அணிந்த குளிர்ந்த அழகிய துளசி மாலையை எடுத்து வந்து எனக்குச் சூட்ட என் உடல் வெப்பம் தணியும்..
விருந்தாவனத்தின் காட்டில் பலராமரும் கண்ணனும் விளையாடிக் கொண்டிருந்த பொழுது அவர்களைக் கொல்லும் பொருட்டு பிலம்பன் அங்கு வர ,கண்ணன் அதை உணர்ந்து கொண்டு விளையாட்டுக்கு அழைத்து விளையாட்டில் தோற்றவர்கள் வென்றவர்களை முதுகில் தூக்கிச் செல்ல வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். அதைப் போலவே பலதேவர் வெல்ல பிலம்பன் அவரைத் தூக்கிச் சென்றான்..பாண்டீர வடம் (கன்றுகளை மேய்க்கும் மேய்ச்சல் நிலப்பகுதி ) என்னும் இடத்தில் ஓர் ஆலமரத்தின் அருகே பிலம்பனின் சூது புரிந்து கொண்ட பலதேவர் அவனது எலும்பு நொறுங்கும்படி அவனை அழித்தார்.
அன்று கண்ணனோடு பலதேவன் விளையாடி திருவிளையாடல் புரிந்த இந்த பாண்டீர வடத்துக்குத்தான் , தன்னை அழைத்துச் செல்லச் சொல்லி கோதை வேண்டுகோள் விடுக்கிறாள் .
No comments:
Post a Comment
மறுமொழி இடுக!