135. அனுங்க வென்னைப் பிரிவுசெய்
பாடல் 135அனுங்க வென்னைப் பிரிவுசெய்
தாயர் பாடி கவர்ந்துண்ணும்
குணுங்கு நாறிக் குட்டேற்றைக்
கோவர்த் தனனைக் கண்டீரே
கணங்க ளோடு மின்மேகம்
கலந்தாற் போல வனமாலை
மினுங்க நின்று விளையாட
விருந்தா வனத்தே கண்டோமே
விளக்கம் :
அனுங்க என்னைப் பிரிவு செய்து - என்னை வருந்த என்னைப் பிரிவு செய்து
ஆயர் பாடி கவர்ந்துண்ணும் - ஆயர் பாடி மக்களைக் கவர்ந்து உண்ணும்
குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த்தனனைக் கண்டீரே ? - வெண்ணெய் மணம் கொண்டவன் குட்டைக் காளை கோவர்த்தனனைக் கண்டீர்களா ?
கணங்களோடு - தன் நண்பர் கூட்டத்தோடு
மின் மேகம் கலந்தாற்போல -மின்னலும் மேகமும் கலந்தது போல
வனமாலை மினுங்க நின்று விளையாட - கருத்த தேகத்தில் பல பூக்கள் கலந்த மாலை மினுங்க அங்கு நின்று விளையாட
விருந்தாவனத்தே கண்டோமே - விருந்தாவனத்தில் கண்டோமே
கேள்வி : நான் வருந்தும் அளவுக்கு என்னைப் பிரிந்து , ஆயர் பாடி மக்களைக் கவர்ந்து உண்ணும் , வெண்ணை நாற்றம்(நாற்றம் - என்று மோசமான மணத்தைக் குறிப்பதாக இன்று ஆகிவிட்டது.. நாற்றம் என்றாலே மணம் ) கொண்டவன், குட்டைக் காளை கோவர்த்தனனைக் கண்டீர்களா ?
பதில் :
தனது நண்பர்களோடு , கருத்த மேகமும் அதிலே மின்னலும் கலந்தாற்போல , காட்டிலே பூத்த பல பூக்களைக் கொண்டு மாலை அணிந்து அது கருத்த கண்ணனின் தேகத்தில் மினுமினுங்க அவன் அங்கு நின்று விளையாடக் கண்டோமே ..
குணுங்கு நாறி -குட்டேறு - அவனைக் காணோம் எனக் கேட்கும் போது எப்படிச் செல்ல வசைகளைச் சொல்கிறாள் பாருங்கள்..அடேய் அந்த வெண்ணெய் நாற்றம் பிடிச்ச மேனியன் , குட்டைக் காளையைப் பார்த்தீங்களா டா .. :)
காட்டோரமாத் திரிபவன் தானே..அங்கே தென்படும் காட்டுப்பூக்கள் பறித்து மாலை அணிந்து கொள்வான் போல.
No comments:
Post a Comment
மறுமொழி இடுக!