Thursday 12 January 2017

127.ஆரே யுலகத் தாற்றுவார்

127.ஆரே யுலகத் தாற்றுவார்
பாடல் :127
ஆரே யுலகத் தாற்றுவார்
ஆயர் பாடி கவர்ந்துண்ணும்
காரே றுழக்க வுழக்குண்டு
தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை
ஆரா வமுத மனையான்றன்
அமுத வாயி லூறிய
நீர்தான் கொணர்ந்து புலராமே
பருக்கி யிளைப்பை நீக்கீரே

விளக்கம் :
ஆரே உலகத்து ஆற்றுவார் -இந்த உலகத்தில்  யார் என்னை ஆற்றுவார்கள் ?

ஆயர் பாடி கவர்ந்து உண்ணும் -ஆயர் பாடி முழுவதும் கவர்ந்து அவர் மனம் கொள்ளை கொண்டிருக்கும்

கார் ஏறு உழக்க உழக்குண்டு - கரிய நிறத்துக் காளை என்னை வருத்த அதனால் வருந்திக்கொண்டு
தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை - தளர்ந்தும் முறிந்தும் கிடப்பவளை
ஆராவமுதன் மனையான் தன் -  என்னவன்ஆராவமுதனின்
அமுத வாயில் ஊறிய நீர்தான் கொணர்ந்து புலராமே - அமுத வாயில் ஊறிய நீர்தான் கொண்டு வந்து,  நான் தெளிய

பருக்கி இளைப்பை நீக்கீரே - அதைப் பருகத்  துணை புரிந்து  எனது இளைப்பை நீக்குங்கள்

ஆயர் பாடி மக்களை முழுவதும் மனம் கவர்ந்த கள்வன் கரிய நிறத்துக் காளை என்னை அலைக்கழிக்கிறான் வருத்துகிறான்..
Image result for arts of shanmugavel
ஓவியம் சண்முகவேல் 
அதிலேயே உழன்று கொண்டு மனம் வருந்திக் கொண்டு தளர்ந்தும் முறிந்தும் கிடக்கிறேன் ..என்னை யார் இந்த உலகத்தில் ஆற்றுப் படுத்துவார்கள் ?


அப்படி எவரேனும் ஆற்ற வேண்டும் எண்ணம் கொண்டவர்கள் இருந்தால் என் மனையான் (இல்லத்து அரசன் - கணவன் ) ஆராவமுதன் வாயில் ஊறிய நீர் (சாமான்யர்கள் வாயில் ஊறினால் தான் அது எச்சில்..அவள் மனம் கொண்டவன் வாயில் ஊறுவது அவளுக்கு அமுதம்..ஏற்கனவே சங்கோடு சண்டையிட்டவள் நீ மட்டும் ஒருத்தனாக அவர் வாயமுதம் பருகுகிறாய் நீயல்லவோ செல்வத்துச் செல்வன் நீ ஒற்றையாய் பருகுதல் நியாயம் ஆகாது..அவன் வாயமுதம் மணம் எப்படி இருக்கும் சொல்லேன் கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ திருப்பவள வாய் தான் தித்தித்து இருக்குமோ என விருப்புற்றுக் கேட்டவள் ஆயிற்றே )

ஆகவே அந்த ஆராவமுதனின் வாயில் ஊறிய நீர் கொண்டு வந்து அவளைப் பருக வைத்து , இந்தக் காதல் நோயினால் பெற்ற இளைப்பை அவளுக்கு நீக்கச்சொல்லி வேண்டுகிறாள் 

No comments:

Post a Comment

மறுமொழி இடுக!