134.பட்டி மேய்ந்ததோர் காரேறு
நாச்சியார் திருமொழி பதினான்காம் பத்து ஆரம்பம். இதுவே நாச்சியார் திருமொழியின் கடைசிப் பத்து. அவள் மனம் கொண்ட கள்வன் கண்ணனே அவளுக்கு எல்லாம். கண்ணனின் பல அவதாரங்களாக சொல்லப்பட்டவற்றை அவள் புகழ்ந்தாலும் எத்தனை திருமாலைப் பாடினாலும் அவள் மனம் கண்ணனிடமே. கண்ணனைச் சென்று சேர்வது அவள் வாழ்ந்த வாழ்வின் பிறவிப்பயன் என எண்ணியவள். தன்னை , அவன் வாழ்ந்ததாகச் சொல்லப்பட்ட பிருந்தாவனத்தில் கொண்டு சேர்க்கச் சொல்லி ஒரு பத்துப் பாடல்கள் பாடியிருந்தாள். அதன் பின் அவள் அழலை நோய் தீர மருந்துகள் என்னவென்று சொல்லி இருந்தாள் . தற்பொழுது விருந்தாவனத்தில் கண்ணனைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறாள்.. .இப்பத்து ஓர் உரையாடல் பாவனையில் தான் அமைந்திருக்கின்றது போவோர் வருவோர் காண்பவற்றிடம் எல்லாம் கண்ணனைப் பார்த்தீர்களா பார்த்தீர்களா என ஆண்டாள் விசாரிக்க, அவர்களும் அவனைப் பார்த்ததாகச் சொல்கின்றார்கள் .அவள் கேட்டுக் கொள்கிறாளே தவிர
இறுதிவரை அவள் பார்த்ததாக எப்பாடலும் இல்லை. வேண்டுதலில் ஆரம்பித்த அவள் மனம் தவிப்பிலேயே முடிந்துவிட்டது.. ஆனால் காலம் என ஒன்று இருக்கிறது இல்லையா ?
இற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் என ஆண்டாள் வேண்டியதைச்
செய்துவிட்டது. ஆம்! இன்றும் பெருமாளையோ ஆண்டாளையோ தனித் தனியாக பிரித்தறிய முடியவில்லை
பாடல் : 134
பட்டி மேய்ந்ததோர் காரேறு
பலதே வற்கோர் கீழ்க்கன்றாய்
இட்டீ றிட்டு விளையாடி
இங்கே போதக் கண்டீரே
இட்ட மான பசுக்களை
இனிது மறித்து நீரூட்டி
விட்டுக் கொண்டு விளையாட
விருந்தா வனத்தே கண்டோமே
விளக்கம் :
பட்டி மேய்ந்த ஓர் கார் ஏறு -தொழுவத்தில் மேய்ந்த ஒரு கருங் காளை
பலதேவற்கு ஓர் கீழ்க் கன்றாய் - பலதேவருக்கு ஒரு நல்ல தம்பியாய்
இட்டீறிட்டு விளையாடி - மிதப்புடன் விளையாடி
இங்கே போதக் கண்டீரே - இங்கே வரக் கண்டீர்களா ?
இட்டமான பசுக்களை - தனக்கு விருப்பமான பசுக்களை
இனிது மறித்து நீரூட்டி - இனிமையாகப் பேசி அவற்றைத் தடுத்து அவற்றிற்கு நீர் ஊட்டி
விட்டுக் கொண்டு விளையாட - மேய விட்டுக் கொண்டு அவன் விளையாட
விருந்தாவனத்தே கண்டோமே - விருந்தாவனத்திலே நாங்கள் கண்டோமே
இட்டீறு - செருக்கு /மிதப்பு
கேள்வி : தொழுவத்தில் மேய்ந்த ஒரு கருங்காளை ,பல தேவருக்கு ஒரு நல்ல தம்பியாய் , செருக்குடன் (ஒரு வித மிதப்புடன் ) விளையாடி இங்கே வரக் கண்டீர்களா ?
பதில் : தனக்கு விருப்பமான பசுக்களை ,மேயச் செல்லும் அவற்றை இடை நிறுத்தி அவற்றிற்கு நீர் ஊட்டி ,பின் மேய விட்டுக் கொண்டு விருந்தாவனத்தில் அவன் விளையாடக் கண்டோமே
No comments:
Post a Comment
மறுமொழி இடுக!