130.வெற்றிக் கருள கொடியான்றன்
பாடல் :130வெற்றிக் கருள கொடியான்றன்
மீமீ தாடா வுலகத்து
வெற்ற வெறிதே பெற்றதாய்
வேம்பே யாக வளர்த்தாளே
குற்ற மற்ற முலைதன்னைக்
குமரன் கோலப் பணைத்தோளோடு
அற்ற குற்ற மவைதீர
அணைய வமுக்கிக் கட்டீரே
விளக்கம் :
வெற்றிக் கருள கொடியான் தன் மீ - மேன்மை பொருந்திய வெற்றிக் கருளக் கொடியான் தன்
மீது ஆடா உலகத்து - ஆணையை மீறி ஆடாத செல்ல முடியாத உலகத்து
வெற்ற வெறிதே பெற்ற தாய் வேம்பே ஆக வளர்த்தாளே- அவனைப் பெற்ற தாய் யசோதை அவனை ஒருவனுக்கும் சிறிதும் பயனில்லாத கசப்பான வேம்பாக வளர்த்தாளே
குற்றமற்ற முலை தன்னைக் - அவனைத் தவிர வேறு எவரும் தொட முடியாத வேறு எவரையும் நினையாத என் குற்றமற்ற முலைகளை
குமரன் கோலப் பணைத்தோளோடு - குமரனின் அழகிய பருத்த தோளோடு
அற்ற குற்றம் அவை தீர அணைய அமுக்கிக் கட்டீரே - இதுவரை அவன் தோள் சேராத குற்றம் அவை தீர நன்கு அணைத்து அமுக்கிக் கட்டுங்கள் !
கருளக் கொடி - முல்லை மாலுக்கு உரியது வேட்டைக்குச் செல்லும் பொழுது கருளன் வழி காட்டும் அதுவே பின்னாளில் விஷ்ணுவுக்கும் ஆகி வந்தது )
வெற்ற வெறிதே - துளியும் பயனின்றி
வெற்றி பெற்ற கருளக் கொடியான் மேன்மை பொருந்திய அவன் ஆணையை மீறிச் செல்லாத இந்த உலகத்தில் , அவனைப் பெற்ற தாய் யசோதையோ அவனைத் துளியும் பயனில்லாத வேம்பாக வளர்த்து விட்டாள் (யசோதை பெறவில்லை எனினும் வளர்த்தவள் மனம் குளிர பெற்றவள் ஆக்கிவிட்டாள் அதே நேரம் இப்படி அவனை வளர்த்ததற்கு குற்றமும் சாட்டுகின்றாள் )
குற்றம் அற்ற முலைகள்..உன்னைத் தவிர வேறு எவரையும் சேர விரும்பாத , வேறு எவரும் இதுவரை தொடாத உன்னை மட்டுமே சேரக் காத்திருப்பவை உனைச் சேர்வதன்றி ஒரு பாவமும் அறியாத குற்றம் அற்றவை. இதுவரை உன் தோள் சேராத ஒன்றே அவற்றின் குற்றம். அந்தக் குற்றம் அவை தீர , குமரனின் (இதுவரை குமரன் என்ற பெயரை முருகனுக்கு மட்டும் தானே பயன்படுத்திக் கேட்டிருப்போம் . பாருங்கள் இது பொதுப் பெயர் போலும் தன் தலைவனுக்கும் இப்பெயரைப் பயன்படுத்துகின்றாள் ) பெரிய பருத்த தோளோடு அவற்றை நெருக்கி அணைத்து அமுக்கிக் கட்டுங்கள் !அவை இதுவரை பெற்ற துன்பமும் நீங்கட்டும். ஆறுதல் பெறட்டும்.!!
No comments:
Post a Comment
மறுமொழி இடுக!