129.நடையொன் றில்லா வுலகத்து
பாடல் :129நடையொன் றில்லா வுலகத்து
நந்த கோபன் மகனென்னும்
கொடிய கடிய திருமாலால்
குளப்புக் கூறு கொளப்பட்டு
புடையும் பெயர கில்லேன்நான்
போட்கன் மிதித்த அடிப்பாட்டில்
பொடித்தான் கொணர்ந்து பூசீர்கள்
போகா வுயிரென் னுடம்பையே
விளக்கம் :
நடை ஒன்று இல்லா உலகத்து - ஓர் ஒழுங்குமுறை எதுவும் இல்லாத இந்த உலகத்தில்
நந்தகோபன் மகன் என்னும் கொடிய கடிய திருமாலால் - நந்தகோபன் மகன் என்னும் கொடூரமான இரக்கமற்ற கல் போன்ற கடினமான திருமாலால்
குளப்புப் கூறு கொளப்பட்டு - பெருந் துன்புறுத்துதலுக்கு ஆளாகி
புடையும் பெயரகில்லேன் நான் -அசையவும் முடியாமல் இருக்கின்றேன் நான்
போட்கன் மிதித்த அடிப்பாட்டில் - அந்தப் பொய்யன் மிதித்த அவன் கால் அடியில் கிடக்கும்
பொடித்தான் கொணர்ந்து - பொடியினை கொண்டு வந்து
பூசீர்கள் போகா உயிர் என் உடம்பையே - போக மறுக்கும் உயிர் கொண்ட என் உடம்பில் பூசுங்கள்
இந்த உலகனில் எதுதான் ஒழுங்காக நடக்கின்றது ? (அப்பொழுதேவா ..) எந்த ஒழுங்கிமில்லாத உலகில் ( ஒரு சலிப்போடு சொல்கின்றாள் ..நம் மனநிலையைப் பொறுத்தே தான் வெளிக் காட்சிகளும் அமையும்..எதைப் பார்த்தாலும் வெறுப்பா இருக்கு வேறென்ன செய்ய..)
நந்தகோபன் மகன் இருக்கானே அவன் ரொம்பக் கொடூரமானவன் இரக்கமற்றவன் கல் போன்று மிகக் கடினமானவன் (இப்பவும் எவரையேனும் குறிப்பிடும்போது அவங்க ரொம்பக் கடிசுன்னு பேச்சு வழக்கில் சொல்வதுண்டு..ஆண்டாளின் சிறப்பே பேச்சு வழக்குகளில் வரும் சொல்லாடல்கள் தான் நான் பெரிய்ய இலக்கியவாதியாக்கும் என்றெல்லாம் சொல்லி நம்மைத் தூர வைக்காமல் நம் அருகிலேயே உட்கார்ந்து கதை சொல்பவள் )
ஓவியம் சண்முகவேல் |
இருந்தாலும் சொல்கின்றேன் .அந்தப் பொய்யன் ( வருவதாகச் சொல்லிவிட்டு வரவில்லையாம் .இவ்வளவு வேண்டிய அவளிடம் தன் உருக் காட்டவில்லையாம் ) மிதித்த இடத்தில் அவன் கால் பட்ட இடத்தில் இருக்கும் மண்ணை எடுத்துக் கொண்டு வந்தேனும் , போக மறுக்கும் உயிர் கொண்ட உடலின் மீது பூசுங்கள்.
ஓவியம் சண்முகவேல் |
சில நேரங்களில் தொண்டைக்கும் நெஞ்சுக்குழிக்கும் இழுத்துக் கொண்டு இருக்கும் உயிர்..எதையோ மனத்தில் போட்டு அழுத்தி அது நிறைவேறாத காரணத்தினால் போக மனமின்றி உடலிலேயே இருந்து கொண்டிருக்கும். அது நாடிய ஒன்று கிட்டிவிட்டால் உடனே அமைதி பெற்றுக் கிளம்பி விடும் .
அதைத்தான் ஆண்டாள் சொல்கின்றாள். கண்ணனோடு வாழும் ஆசையோடு வலம் வந்தவள். வாழ முடியாமல் போன சோகம் வாட்டுகின்றது. என் உயிர் இன்னும் போகாமல் ஒட்டிக் கொண்டு இருக்கின்றது.அதற்குக்காரணம் அவன்தான். அவன் பாதம் பட்ட மண் இருந்தால் கூடப் போதும் எடுத்து வந்து அதன் மீது பூசுங்களேன் :(
அநேகமாக இது ஆண்டாள் தன் இறுதிக் காலத்தில் எழுதிய பாடலாக இருக்கக்கூடும் என நினைக்கிறேன்:(
No comments:
Post a Comment
மறுமொழி இடுக!