Wednesday, 11 January 2017

126.கஞ்சைக் காய்ந்த கருவில்லி

126.கஞ்சைக் காய்ந்த கருவில்லி 
பாடல் :126

கஞ்சைக் காய்ந்த கருவில்லி
கடைக்க ணென்னும் சிறைக்கோலால்
நெஞ்சூ டுருவ வேவுண்டு
நிலையும் தளர்ந்து நைவேனை
அஞ்சே லென்னா னவனொருவன்
அவன்மார் வணிந்த வனமாலை
வஞ்சி யாதே தருமாகில்
மார்வில் கொணர்ந்து புரட்டீரே

விளக்கம் : 

கஞ்சைக் காய்ந்த கருவில்லி - கஞ்சன் எனும் கம்சனை வீழ்த்திய கருமை நிற , வில்லினைப் போன்ற புருவம் கொண்ட
கடைக்கண் என்னும் சிறைக்கோலால் - கடைக்கண் பார்வை என்னும்  விழி  அம்பால்
நெஞ்சு ஊடுருவ  - புருவ வில்லில் இருந்து புறப்பட்ட  அந்தப் பார்வை அம்பு என் நெஞ்சை ஊடுருவ
வேவுண்டு நிலையும் தளர்ந்து நைவேனை -  நெஞ்சம் வெந்து என் நிலையும்  தளர்ந்து நொந்து இருப்பவளை
அஞ்சேல் என்னான் அவன்  ஒருவன் - அஞ்சாதே என்று சொல்லாதவன் ஒருவன்
அவன் மார் அணிந்த வனமாலை - அவன் மார்பில் அணிந்த வனமாலை
வஞ்சியாதே - என்னை வஞ்சிக்காமல் தந்தான்எனில்
மார்வில் கொணர்ந்து புரட்டீரே - என் மார்பில் கொண்டு வந்து புரட்டுங்கள் !

கம்சன் என்பவனைக் காய்ந்த ( வறுத்து எடுத்த ன்னு சொல்வோம்ல ..கெத்தா அது போலச் சொல்றா ) கருமை நிற, வில் போன்ற புருவம் கொண்ட
கடைக்கண் என்னும் விழி அம்பால் ( சிறை - சிறை செய்தல் /விழிகளைச் சுழல விடுதல் , சிறகு ..இதுல நான் முதல் இரண்டைக் கையாண்டு இருக்கிறேன் ) கடைக்கண் பார்வையிலேயே கட்டுண்டாள் ..அந்தப் பார்வை அம்பானது நெஞ்சை ஊடுருவித் தைக்க நெஞ்சம் வெந்து (வேவு - வேகுதல் வெந்து போதல் ) நிலை தளர்ந்து நைந்து போனவளை ,இப்படி எல்லாம் எனக்காகச் சிரமப்படுகிறாயே அஞ்சாதே நான் இருக்கிறேன் என்று ஒரு சொல் சொல்லல (ஊம்ங்கல ஆம்ங்கல என்பது பேச்சு வழக்கு  ) அப்படிச் சொல்லாத ஒருவன் (ஆம் நீ சொல்லவில்லை என் காயத்திற்கு மருந்து இடவில்லை எனினும் உன் மீது வைத்த பற்று வைத்தது வைத்தது தான்..அதிலிருந்து ஒரு நாளும் பின் வாங்க மாட்டேன் என்கிறாள் நிலை குலைந்த நிலையிலும் )

Image result for arts of shanmugavel
ஓவியம் சண்முகவேல் 
 அவனுடைய மார்பில் அணிந்த வனமாலை காட்டுப் பூக்களால் ஆன  மாலை பெரும்பாலும் மஞ்சள் பூக்கள் . ) யை என்னை வஞ்சிக்காமல்  தந்தான் எனில் அதை எடுத்து வந்து என் மார்பில் புரட்டுங்கள்..அப்படியாவது என் நெஞ்சம் தான் அடைந்த புண் ஆறட்டும் 

No comments:

Post a Comment

மறுமொழி இடுக!