121.கற்றினம் மேய்க்கிலும் மேய்க்கப்பெற்றான்
பாடல் :121
கற்றினம் மேய்க்கிலும் மேய்க்கப்பெற்றான்
காடுவாழ் சாதியு மாகப்பெற்றான்
பற்றியுரலிடை யாப்புமுண்டான்
பாவிகாள் உங்களுக் கேச்சுக்கொலோ
கற்றன பேசி வசையுணாதே
காலிக ளுய்ய மழைதடுத்து
கொற்றக் குடையாக வேந்திநின்ற
கோவர்த் தனத்தென்னை யுய்த்திடுமின்
விளக்கம் :
கற்று இனம் மேய்க்கிலும் மேய்க்கப் பெற்றான் - கன்றுகள் இனம் மேய்த்து அதையே தொழிலாகப் பெற்றான் (ஆய்ச்சியர் )
காடு வாழ் சாதியுமாகப் பெற்றான் - காட்டிலே வாழ்ந்து இடையர் சாதியுமாகப் பெற்றான்
பற்றி உரல் இடை யாப்பும் உண்டான் - தனது குறும்புத் தனங்களால் ,தனது தாயால் உரல் பற்றி கட்டும் உண்டான்
பாவிகாள் உங்களுக்கு ஏச்சுக் கொலோ - பாவிகளே ! உங்களது ஏச்சுக்களை நிறுத்தும் நாள் எந்நாளோ ?
கற்றன பேசி வசையுணாதே - அவனை வசைபாடப் கற்றதை வைத்துக் கொண்டு என்னிடம் ஏதேனும் பேசி என்னிடம் திட்டு வாங்காமல்
காலிகள் உய்ய மழை தடுத்து- பசுக்கள் உய்ய மழை தடுத்து
கொற்றக் குடையாக ஏந்தி நின்ற - ஓர் அரசனாக தன்னை நம்பியுள்ளவர்களைக் காப்பாற்ற குடை ஏந்தி நின்ற
கோவர்த்தனத்து என்னை உய்த்திடுமின் - கோவர்த்தன மலைக்கு என்னைக் கொண்டு சேர்த்திடுங்கள்
காலிகள் - பசுக்கூட்டங்கள்
கன்றுகள் இனம் மேய்ப்பதைத் தொழிலாகக் கொண்டவன் தான்..ஆய்ச்சியர் .
காட்டினில் வாழும் இடையர் சாதியுமாகப் பெற்றான்.. (முல்லை நில மாயோனும் இவ்வாறே.. காடும் காடும் சார்ந்த இடம் முல்லை..பசுக்கள் மேய்ப்பதே தொழில்..அதனால் இடையர் என்ற பெயரும் வந்தது . )
ஆமாம் வெண்ணெய் திருடியவன் தான்..குறும்புத்தனங்கள் செய்து தாயால் உரலில் கட்டப்பட்டுக் கிடந்தவன்தான்..
இதற்காக அவனை நீங்கள் ஏசுவீர்களோ (ஏச்சு - இழிவாகப் பேசுதல் ) பாவிகளே! அவனைத் திட்ட நீங்க கற்றனவற்றை பேசி என்னிடம் திட்டு வாங்காமல் , பசுக்கள் பிழைக்க பெருமழையைத் தடுத்து,ஒரு அரசனைப் போல வெற்றிக் குடையேந்தி நின்ற அந்த கோவர்த்தன மலைக்கு என்னை அழைத்துச் செல்லுங்கள்..
No comments:
Post a Comment
மறுமொழி இடுக!