Monday 9 January 2017

124.கண்ணனென்னும்கருந்தெய்வம்

124.கண்ண னென்னும் கருந்தெய்வம்

பதிமூன்றாம் பத்து இனிதே ஆரம்பம் ..இனிதே என்று சொல்லக் கூட குற்ற உணர்ச்சியாக இருக்கின்றது..ஏனெனில் கோதை இனிமையான மன நிலையில் இல்லை..துன்பத்தின் விளிம்பில் நின்று கொண்டு பாடிய பாடல்கள் இவை.. :( காதலின் பித்து நிலை முற்றி விட்டது..என்ன செய்தால் தன் துன்பம் தீரும் என்று சொல்கின்றாள்.. போன திருமொழியில் தன்னை வடமதுரை கொண்டு சேர்ப்பதே தன்னை உய்விக்கும் வழி என்று ஆணித்தரமாகச் சொன்னவள் , இதில் தான் படும் துன்பத்தை எவ்விதமாகத் தீர்க்கலாம் என்றும் சொல்கின்றாள்.. வேதனையுடன் கவனிப்போம் !

பாடல் :124
கண்ண னென்னும் கருந்தெய்வம்
காட்சி பழகிக் கிடப்பேனை
புண்ணில் புளிப்பெய் தாற்போலப்
புறநின் றழகு பேசாதே
பெண்ணின் வருத்த மறியாத
பெருமா னரையில் பீதக
வண்ண ஆடை கொண்டுஎன்னை
வாட்டம் தணிய வீசீரே

விளக்கம் :

கண்ணன் என்னும் கருந் தெய்வம் - கண்ணன் எனும் கருமை நிறத் தெய்வம்
காட்சி பழகிக் கிடப்பேனை - அவனையே கண்டு அவனோடு கற்பனையிலேயே வாழ்ந்து அதிலேயே சுகம் பழகிக் கிடப்பவளை
புண்ணில் புளிப்பு எய்தாற்போலப் புற நின்று அழகு பேசாதே - நீங்களோ என் புறம் நின்று புண்ணில்  புளிப்பு எய்தது போலப் புறணி பேசி அழகு காட்டாமல்
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையில் - இந்தப் பெண்ணின் வேதனை வருத்தங்கள் அறியாத அந்தப் பெருமானின் இடையிலே
பீதக வண்ண ஆடை கொண்டு -அணிந்திருக்கும்  மஞ்சள்
 வண்ண பட்டாடையைக் கொண்டு
என்னை வாட்டம் தணிய வீசீரே -  என் வேதனை தீர என் வாட்டம் தீர அதனை என் மீது வீசுவீர்களாக !

கண்ணன் என்னும் கருந் தெய்வத்தையே எண்ணி நினைத்துருகி ,அவனோடு வாழ்வதாக,  கற்பனை கண்டு அந்தக் காட்சியே பழகிக் கிடப்பவளை , ஏற்கனவே மனம் நொந்து புண்ணாக இருக்க அதை மேலும் புண்ணாக்கும் விதமாக புறணி பேசி அழகு காட்டாமல் (அழகு காட்டுவதை வக்கனை காட்டுவதுன்னு சொல்வோமே..ஒரு வேதனையில் இருக்கும் பொழுது பழிப்புக் காட்டுவது இன்னும் கடுப்பை ஏற்றும்..வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சாதே என்போமே..இவங்க புறணி பேசி அழகு காட்டுவது புண்ணில்  புளிப்பு எய்தது போல இருக்காம்..அது என்ன புளிப்பு எய்தல்..தன் தன்மை திரிதல்/ இன்னும் அடர்த்தி ஆகுதல்..புண்ணை இன்னும் புண்ணாக்குதல்
சில நேரம் இதைக் கேட்டுக் கேட்டுப் புளிச்சுப் போச்சு என்பதில்லையா?  )

Image result for krishna
என் புண்ணை மேலும் புண்ணாக்காமல் புறம் நின்று அழகு பேசாதீர்கள் .
 வேண்டுமானால் வேறு ஒன்று செய்யுங்கள்..என் வாட்டம் தணிய ,இங்கு இப்படி ஒரு பெண் வேதனையில் உழல்கிறாள் என்ற எண்ணம் கிஞ்சித்தும் இல்லாத என் வருத்தம் அறியாத அந்தப் பெருமானின் இடையில் உடுத்திய  மஞ்சள்  வண்ணப் பட்டாடையை என் மீது கொண்டு வந்து வீசுங்கள்.. அதனை நுகர்ந்து என் மன வாட்டத்தைச் சற்றே தணித்துக் கொள்கிறேன்.. (தணித்தல் -குளிர வைத்தல் ஆசுவாசப்படுத்துதல் )

No comments:

Post a Comment

மறுமொழி இடுக!