136.மாலாய்ப் பிறந்த நம்பியை
பாடல் : 136மாலாய்ப் பிறந்த நம்பியை
மாலே செய்யும் மணாளனை
ஏலாப் பொய்க ளுரைப்பானை
இங்கே போதக் கண்டீரே
மேலால் பரந்த வெயில்காப்பான்
வினதை சிறுவன் சிறகென்னும்
மேலாப் பின்கீழ் வருவானை
விருந்தா வனத்தே கண்டோமே
விளக்கம் :
மாலாய்ப் பிறந்த நம்பியை - கருமையாய்ப் பிறந்த நம்பியை
மாலே செய்யும் மணாளனை - மயக்கம் செய்யும் என் மணளானை
ஏலாப் பொய்கள் உரைப்பானை - ஏற்றுக் கொள்ள முடியாத பொய்கள் பல உரைப்பவனை
இங்கே போதக் கண்டீரே - இங்கே வரப் பார்த்தீர்களா ?
மேலால் பரந்த வெயில் காப்பான் - மேலே விரவி இருக்கும் வெயில் உடலில் படாமல் காப்பவன்
வினதை சிறுவன் - வினதை என்ற பெண்ணின் மகனான கருடனின்
சிறகு என்னும் மேலாப்பின் கீழ் வருவானை - மேலாக விரித்த சிறகின் அடியின் கீழ் வருவானை
விருந்தானவத்தே கண்டோமே - விருந்தாவனத்தே கண்டோமே
ஏல் - ஏற்றுக் கொள்ளல்..ஏலா - ஏற்றுக்கொள்ள முடியாத
மால் - முல்லை நிலக் கடவுள் மால் / கருமை நிறம் / மயக்கம்
மால் -மை (மை இருட்டு என்பார்களே..கருமை )
புராணப்படி வினதை - கருடனின் தாய் ,காசிபர்- கருடனின் தந்தை ..
வினதை சிறுவன் - கருடன்
மாலாய்ப் பிறந்த நம்பி,கருப்பாய்ப் பிறந்த நம்பியை ,என்னை மயக்கமுறச் செய்யும் மணாளனை ,(மணாளன் -மாப்பிள்ளைப் பையன் bridegroom )
ஏற்றுக்கொள்ள முடியாத பொய்கள் உரைப்பவனை (அது ஏன் ஏற்றுக் கொள்ள முடியாத பொய்கள்.. இவ்வளவு தவி தவிக்கிறாள் ஆனால் அவன் அதற்கு வராமல் இருக்க ஒரு உண்மைக் காரணமாவது சொல்லலாம் தானே..இந்த அன்பைப் புரியாமல் சட்டென்று வந்து அணைக்காமல் வராமல் சமாளிப்பு செய்பவன் சொல்லும் உரைகள் எல்லாமே பொய்யே ..எதுவும் ஏற்றுக்கொள்ளத் தக்கது இல்லை ) இங்கே வரப் பார்த்தீர்களா ?
இது ஓர் அழகான கற்பனை..பொதுவாக நீங்கள் பெருமாளை கருட வாகனத்தில் எப்படிப் பார்த்திருப்பீர்கள் என நினைவுகூருங்கள். கருடன் இரு கைகளை விரித்திருக்க அந்தக் கைகளில் தனது திருவடிகளை வைத்துத் தானே..ஆனால் இங்க ஆண்டாள் என்ன சொல்கிறாள் பாருங்கள்..அப்படி நின்றால் வெயில் மேலே படும் என சிறகுகளில் அடியில் கண்ணனைக் கொண்டு வந்து விட்டாராம் கருடன்.. அழகு இல்லையா ? :)
ஏலாப் பொய்கள் உரைப்பான் எனத் திட்டினாலும் அவன் மேனி துன்புறக் கூடாது என்று அவளது அக்கறையை இங்கே கருடனிடம் சுமத்தி விடுகிறாள் பாருங்கள்
இப்படி ஓர் காதலைப் பெற என்ன தவம் செய்தனை...கண்ணா..நீ என்ன தவம் செய்தனை..:)
இப்படி ஓர் காதலைப் பெற என்ன தவம் செய்தனை...கண்ணா..நீ என்ன தவம் செய்தனை..:)
No comments:
Post a Comment
மறுமொழி இடுக!