133.அல்லல் விளைத்த பெருமானை
பாடல் : 133அல்லல் விளைத்த பெருமானை
ஆயர் பாடிக் கணிவிளக்கை
வில்லி புதுவை நகர்நம்பி
விட்டு சித்தன் வியன்கோதை
வில்லைத் தொலைத்த புருவத்தாள்
வேட்கை யுற்று மிகவிரும்பும்
சொல்லைத் துதிக்க வல்லார்கள்
துன்பக் கடலுள் துவளாரே
விளக்கம் :
அல்லல் விளைத்த பெருமானை - துன்பம் கொடுத்த பெருமானை
ஆயர் பாடிக்கு அணி விளக்கை - ஆயர்பாடியின் அழகான விளக்கை
வில்லி புதுவை நகர் நம்பி விட்டு சித்தன் வியன் கோதை - வில்லிபுத்தூர் நகர் நம்பி விஷ்ணு சித்தன் என்ற பெரியாழ்வாரால் பெருமை பெற்ற கோதை
வில்லைத் தொலைத்த புருவத்தாள் - தன் வேதனையில் வில் போன்ற புருவ அழகைத் தொலைத்தவள்
வேட்கை உற்று மிக விரும்பும் - வேட்கை கொண்டு மிக விரும்பும்
சொல்லைத் துதிக்க வல்லார்கள் - சொல்லைப் பாட வல்லார்கள்
துன்பக் கடலுள் துவளாரே - துன்பக் கடலின் உள் துவள மாட்டார்கள்
தன்னைச் சேராமல் தனக்குத் துன்பம் தந்த பெருமானை ஆயர்பாடியின் அழகான குல விளக்கு கண்ணனை , வில்லி புத்தூர் நகர் நம்பி விஷ்ணு சித்தன் என்ற பெரியாழ்வாரால் பெருமை பெற்ற கோதை, (கணவனை எவ்வளவு விரும்பிய போதிலும் தகப்பனை எங்கேனும் விட்டுக் கொடுக்கிறாளா பாருங்கள்.. அவ்வளவு அன்பு அவர் மீது..தான் இன்னாரின் மகள் என்பதிலே தான் அவளுக்கு எவ்வளவு பெருமை )
வில்லைத் தொலைத்த
புருவத்தாள் ..ஏன் அப்படி..? வில் போன்ற அழகிய புருவம் கொண்டிருந்தவள் ஆனால் கண்ணனைச் சேராமல் வேதனையில் உழன்றதில் தூக்கம் போனது. அதனால் அந்த வில் அழகு போனது. ஆகவே தான் வில்லைத் தொலைத்த புருவத்தாள் .
வேட்கை கொண்டு மிக விரும்பிச் சொன்ன இந்தப் பாமாலையைத் துதிக்க வல்லார்கள் துன்பக் கடலினுள் துவள மாட்டார்கள் .அவள் வேட்கையை அவள் இடத்திலிருந்து புரிந்தோமானால் எதுவுமே பிழையாகத் தோன்றாது..
இதுவரை தான் அடைந்த துன்பங்களைச் சொன்னாள் .அந்தத் துயர் தீர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் சொல்லிவிட்டாள் . ஒரு பெண்ணாக , தனது ஆசைகளை எந்த அளவுக்கு வெளிப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு வெளிப்படுத்தி இருக்கின்றாள்..இதனாலேயே இன்று இந்தப் பாடல்கள் எல்லாம் இன்றளவும் பெரும்பான்மையோரால் அறியப்படாமலே இருக்கின்றன. அவள் கோவில் கொண்ட வில்லிபுத்தூரில் கூட இவை பொறிக்கப்படவில்லை என்பது உச்சகட்ட வேதனை. அவள் மனத்தை அவள் உணர்வுகளை அவள் தமிழைப் பலரிடமும் கொண்டு சொல்வோம்..
நாச்சியார் திருமொழி பதிமூன்றாம் பத்து நிறைவுற்றது !
வில்லைத்தொலைத்த என்றாள் வில்லைனை தோற்கடித்த எனப்பொருள். "கடுமான் தொலைச்சிய" எனும் சங்க்கவரிகள்.
ReplyDelete