125.பாலா லிலையில் துயில்கொண்ட
பாடல் :125பாலா லிலையில் துயில்கொண்ட
பரமன் வலைப்பட் டிருந்தேனை
வேலால் துன்னம் பெய்தாற்போல்
வேண்டிற் றெல்லாம் பேசாதே
கோலால் நிரைமேய்த் தாயனாய்க்
குடந்தைக் கிடந்த குடமாடி
நீலார் தண்ணந் துழாய்கொண்டென்
நெறி மென் குழல்மேல் சூட்டீரே
விளக்கம் :
பால் ஆல் இலையில் துயில் கொண்ட - பால் உள்ள ஆல் இலையில் உறக்கம் கொண்ட
பரமன் வலைப்பட்டு இருந்தேனை - பரமனிடம் அன்புற்று அந்த வலையில் இருந்தவளை
வேலால் துன்னம் பெய்தாற்போல் - வேலால் துளை செய்தது போல
வேண்டிற்று எல்லாம் பேசாதே - உங்களுக்கு வேண்டியது (வாய்க்கு வந்தது எல்லாம் ) பேசாமல்
கோலால் நிரை மேய்த் தாயனாய்க் - தடி கொண்டு பசு மேய்த்த ஆயனாய்
குடந்தைக் கிடந்த குடம் ஆடி - திருக்குடந்தையில் கிடந்த கோலத்தில் குடம் ஆடிய குடக் கூத்தன்
நீல் ஆர் தண் அம் துழாய் கொண்டு -கருத்த அழகிய குளிர்ந்த துளசி கொண்டு (கருந்துளசி )
நெறி மென் குழல் மேல் சூட்டீரே - அடர்ந்த மென்மையான என் கூந்தல் மீது சூட்டி விடுங்கள்
பால் உள்ள ஆல் (ஆலமரத்து இலை ) இலை மீது துயின்ற கண்ணன் மீது அன்பு கொண்டு அந்தக் காதல் வலையிலேயே அகப்பட்டு இருந்த என்னை (அந்த வலையில் இருந்து வெளியே வர விரும்பாதவள் என்றும் சொல்லலாம் )
(பேசத் தான செய்வாங்க ஒரு பெண் பிள்ளை பிடிவாதமாக கண்ணன் ஒருவனை மட்டுமே நினைந்து நினைந்து உருகி வேறு சிந்தையற்றுக் கிடந்தால் :( ) தடி கொண்டு பசுக்கள் மேய்த்த (பசு மேய்க்கும் பொழுது தடி இருக்கும் கையில் ) ஆயனாய் (மாடு மேய்ப்பவன் )
திருக்குடந்தை |
திருக்குடந்தையில் கிடந்த கோலத்தில் இருக்கும் குடம் ஆடியவன் (பண்டைய தமிழகத்தில் மிகப் பிரபலமானது குடக் கூத்து )
கருந்துளசி |
திருக்குடந்தையில் கிடந்த கோலத்தில் உள்ள குடம் ஆடி, அவனின் கருமை நிற அழகிய குளிர்ந்த துளசி கொண்டு என் அடர்ந்த அதே நேரம் மென்மையான குழல் மீது சூட்டுங்கள்..இதனால் என் வேதனை தீரும் !
No comments:
Post a Comment
மறுமொழி இடுக!