131.உள்ளே யுருகி நைவேனை
பாடல் : 131உள்ளே யுருகி நைவேனை
உளளோ இலளோ வென்னாத
கொள்ளை கொள்ளிக் குறும்பனைக்
கோவர்த் தனனைக் கண்டக்கால்
கொள்ளும் பயனொன் றில்லாத
கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட் டவன்மார்வில்
எறிந்தென் அழலை தீர்வேனே
விளக்கம் :
உள்ளே உருகி நைவேனை - இவனுக்காக என் உடல் மட்டுமன்றி உள்ளமும் உருகி உருகி நைந்து போய்க்கொண்டிருக்கிறது அப்படி நொந்து போனவளை
உளளோ இலளோ என்னாத - இவள் உயிரோடு இருக்கின்றாளா அன்றி இல்லாமல் போய்விட்டாளோ என்னவெனக் கேட்காத
கொள்ளை கொள்ளிக் குறும்பனைக் - என்னைக் கொள்ளை கொண்ட குறும்பனைக்
கோவர்த்தனனைக் கண்டக்கால் - அந்த கோவர்த்தன கிரியைத் தூக்கிய கோவர்த்தனனைக் கண்டீர்கள் என்றால்
கொள்ளும் பயன் ஒன்றில்லாத கொங்கை தன்னைக் - அவனை அடையாமல் எந்தப் பயனற்றும் கிடக்கின்ற என் கொங்கைகளை
கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு - வேரோடு பிடுங்கி அள்ளிப் பறித்து
அவன் மார்பில் எறிந்து என் அழலை தீர்வேனே - அவன் மார்பில் எறிந்து , காமத்தினால் வந்த வெப்ப நோய் தீர்வேனே
கொள்ளை கொள்ளி - அழகான சொல்லாடல் கொள்ளை கொண்டவன் சில நேரம் குழந்தைகளை உயிர்வாங்கி எனத் திட்டுவோமே அது போல :)
அழலை - உடல் சூட்டினால் வருகின்ற நோய். தீயாய்ச் சுடும் காய்ச்சல் )
கண்ணனை நினைத்து நினைத்து உள்ளம் உருகி உள்ளுக்குள்ளேயே நைந்து போகின்றேன் (நைந்து என்பதும் இங்கே அவள் துன்பத்தை வெளிப்படுத்தும் ஆகச்சிறந்த சொல்..வெறுமனே கிழிவதல்ல.அதற்கும் மேலாக .. நினைத்து வாடி மெலிந்து நொந்து வெந்து போய் விட்டாள் )
ஓவியம் சண்முகவேல் |
ஆனால் அதைப்பற்றி அந்தக் கண்ணன் அக்கறை கொண்டானில்லை. (பேச்சு வழக்கில் கேட்போமே..இருக்கேனா செத்தேனான்னு ஒரு வார்த்தை விசாரிச்சியான்னு ..அதைத்தான் சொல்றா ) இருக்காளோ இல்லாமப் போயிட்டாளோன்னு என்னான்னு கூடக் கேட்காத, என்னைக் கொள்ளை கொண்டக் குறும்பன் (சிறு வயது கண்ணனின் குறும்பை வைத்துத்தான் அவளுக்கு கண்ணன் மீது தீராத காதல் வந்திருக்கக்கூடும் என்று ஊகித்து வைத்தேன் மெய்ப்பித்து விட்டாள் ) கோவர்த்தனனைக் கண்டேன் எனில் ( ஏன் இவ்விடத்தில் கோவர்த்தனன் ..பசுக்களும் மக்களும் உயிர் வாழ கொற்றக் குடை ஏந்தி மழையில் இருந்து மலை உயரப் பிடித்துக் காப்பாற்றியவன்.ஒருவேளை இவளையும் காப்பாற்றக் கூடும் )
அவள் காமத் தீ அவன் அணைக்கவே அணையும் !
No comments:
Post a Comment
மறுமொழி இடுக!