Sunday 8 January 2017

123.மன்னு மதுரை தொடக்கமாக

123.மன்னு மதுரை தொடக்கமாக
பாடல் :123
மன்னு மதுரை தொடக்கமாக
வண்துவ ராபதி தன்னளவும்
தன்னைத் தமருய்த்துப் பெய்யவேண்டித்
தாழ்குழ லாள்துணிந் ததுணிவை
பொன்னியல் மாடம்பொ லிந்துதோன்றும்
புதுவையர் கோன்விட்டு சித்தன்கோதை
இன்னிசை யால்சொன்ன செஞ்சொல்மாலை
ஏத்தவல் லார்க்கிடம் வைகுந்தமே

விளக்கம் :
மன்னு மதுரை தொடக்கமாக  - நிலைபெற்ற புகழுடைய மதுரையைத் தொடக்கமாகக் கொண்டு
வண் துவராபதி தன் அளவும் - அழகிய துவராபதி வரையிலும்
தன்னைத் தமர் உய்த்துப் பெய்ய வேண்டித் -  தன்னைத் தனது சுற்றத்தார் /வேண்டியுள்ளோர் கண்ணனிடம் சென்று சேர்க்க வேண்டி
தாழ்குழலாள் துணிந்த துணிவை - நீண்ட கூந்தலைப் பெற்றவள் துணிந்த துணிவை
பொன்னியல் மாடம் பொழிந்து தோன்றும் - பொன் மாடங்கள் அழகுறத் தோன்றும்
புதுவையர் கோன் விட்டு சித்தன் கோதை - வில்லிபுத்தூர்  தலைவன் விஷ்ணு சித்தர் என்ற பெரியாழ்வார் மகள் கோதை
இன்னிசையால் சொன்ன செஞ் சொல் மாலை - இன்னிசையால் சொன்ன செம்மையான சொல் பா மாலையைப்
ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே - பாடிப் புகழ வல்லார்களுக்கு உரிய இடம்   வைகுந்தமே

எந்தப் பெண்ணும் செய்யத் துணிகின்ற துணிவைச் செய்த ஆண்டாள் ..நாணம் விடுத்து , துணிச்சலாக காதலை வெளிப்படுத்தியதும் தன்னை அந்தக் கண்ணனிடம் சென்று சேர்க்கச் சொல்லி வாய் விட்டுக் கேட்டதும் பெரிய துணிவே. வடமதுரையில் கொண்டு சேருங்கள் என ஆரம்பித்து அழகிய துவராபதியில் சென்று சேர்த்து தன்னை உய்விக்கச் சொல்லி (துன்ப வாழ்வில் இருந்து தப்புவிக்கச் சொல்லி ) ,தாழ் குழலாள் (ரொம்ப நீள முடி கொண்டவள் ) பெரியாழ்வார் விஷ்ணு சித்தரின் மகள் கோதை ,இன்னிசையால் சொன்ன அழகிய செம்மையான சொற்பாமாலையை பாடிப் புகழ வல்லார்க்கு உரிய இடம் வைகுந்தமே


கண்ணனைச் சேர்வது ஒன்றே தன் பிறவிப்பயன் தான் உய்ய வழி என்று உரக்கச் சொன்ன துணிச்சல்காரி ஆண்டாள்..தாய் தந்தை உற்றார் உறவினர் அயலார் எவர் பேச்சும் காதல் பித்து கொண்ட பெண்ணின் மனத்தில் ஏறவில்லை அவள் கண்ணன் ஒருவனைத் தவிர வேறெதையும் நினையாள் .
கண்ணன் வளர்ந்த ,திருவிளையாடல் புரிந்த இடங்களுக்கெல்லாம் அழைத்துச் செல்லச் சொல்லி ஆசையாகக் கேட்கின்றாள் ..

உள்ளதை உள்ளபடி சொல்லும் குணத்தாள் சீர் மிகு நாச்சியாரின் பனிரெண்டாம் திருமொழி ,பனிரெண்டாம் பத்து இனிதே நிறைவுற்றது !!!

No comments:

Post a Comment

மறுமொழி இடுக!